உங்களுக்குத் தெரியுமா? வீட்டைத் தூய்மையாக வைத்தால் கூட நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை உண்டாகும்...

 
Published : Oct 09, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
உங்களுக்குத் தெரியுமா? வீட்டைத் தூய்மையாக வைத்தால் கூட நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை உண்டாகும்...

சுருக்கம்

Do you know Even if we keep the house clean we will have a happy mood ...

நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் – இதுதான் நம் அனைவரின் ஆசை. ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே.

நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்.

மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, `இதைவிடக் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே’ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதைத்தான், `மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள்.

சுருக்கமாக, நமக்கு திருப்தியைத் தருவது நேர்மறை எண்ணங்கள்தான்.

இது போன்ற மனநிலையைத் தீர்மானிப்பதில் நாம் வாழும் சூழலுக்கும் பெரும் பங்கு இருக்கிறது’ என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். சூழல் என்பது, அலுவலமாகவோ, உற்றார், உறவினர்களுடன் நாம் வாழும் வீடாகவோ, நண்பர்களுடன் மகிழ்ந்திருக்கும் இடமாகவோகூட இருக்கலாம். ஆனால், நாம் நேரத்தை அதிகம் செலவிடுவது நம் வீட்டில். எனவே, வீட்டில் இருந்து இதைத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். வீட்டில் நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை குறைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்…

வரவேற்க நேர்மறை வார்த்தைகள்!

நாம் வீட்டுக்குள் நுழையும்போது நம்மை வரவேற்பது பாசிட்டிவ் வாசகமாக இருக்கட்டுமே. உதராணமாக, `கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இடம்’, `எல்லாம் நன்மைக்கே’ போன்ற ஏதாவது, ஒரு வாசகமாக அது இருக்கலாம்.

இதை, கேட், கதவு, வீட்டின் வாசல் முகப்பு போன்ற இடத்தில், கண்ணில் படும்படியாக மாட்டிவைக்கவும். அதனுடன் கலர்ஃபுல்லான சிறிது பிளாஸ்டிக் மலர்களைச் செருகிவைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

மாயம் செய்யும் மலரும் நினைவுகள்

உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களையும் மலரும் நினைவுகளையும் போட்டோக்களாக பதிவுசெய்து, சுவர்களில் மாட்டிவைப்பது, உங்களை உற்சாகப்படுத்தும். இது, நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க உதவுவதோடு, அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கத் தேவையான உந்துதலையும் கொடுக்கும்.

கிளி வளர்ப்பு

செல்லப்பிராணி என்கிற புது உறுப்பினர்! வீட்டில் பூனை, நாய், மீன்கள்… என செல்லப்பிராணிகளை வளர்ப்பது பாசிட்டிவ் எண்ணங்கள் வளர உதவும்.

செல்லப்பிராணிகளை அக்கறையோடு வளர்ப்பது, நம் கவலைகளை மறக்க உதவும். அலுவகப் பணி முடிந்து, எப்போது நம் செல்லப்பிராணியைப் பார்ப்போம் என ஏங்க வைக்கும். இது நம் மனநிலையை மேம்படுத்தும். உடனே உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணியை, இப்போதே உங்கள் வீட்டின் புது உறுப்பினராக்குங்கள்.

தூய்மையான வீடு

நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் தூய்மையாக இருந்தால், மனதுக்கு அமைதி கிடைக்கும்’ என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். எனவே, நாம் அதிகம் பயன்படுத்தும் சோஃபா, நாற்காலி போன்ற ஃபர்னிச்சர்கள், தொலைக்காட்சி ஆகியவற்றை தூசிதட்டி, எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

அமைதிக்கு ஓர் அறை!

வீட்டில் படுக்கை அறை, குளியல் அறை, பூஜை அறை… என இருப்பதுபோல, அமைதி கிடைக்க வழிசெய்யும் ஓர் அறையை உருவாக்கிக்கொள்ளலாம். அது, அறையாகவோ அல்லது சிறிய இடமாகவோகூட இருக்கலாம். அது பூஜை அறையாக இருந்தால், இன்னும் சிறப்பு.

அந்த இடத்தில் வெளியிலிருந்து எந்தச் சத்தமும் ஊடுருவக் கூடாது. அறைக்குள் போனாலே மன அமைதி கிடைக்க வேண்டும். அந்த அறையில் தினமும் சிறிது நேரத்தை அமைதியாகச் செலவிட வேண்டும். அங்கே அமர்ந்து, தியானம், யோகா செய்வது சிறந்தது.

பிடித்த இசை புத்துணர்ச்சி தரும்!

நீங்கள் அதிகம் விரும்புகிறவர்களின் படங்களை கண்ணில்படும்படி மாட்டிவையுங்கள். அந்தப் படத்தில் இருப்பவர் உங்களின் மனம் கவர்ந்தவராகவோ, உங்கள் குருவாகவோ, கடவுள் படமாகவோ இருக்கலாம். உற்சாகம் தரும் பாடல்களை அடிக்கடிக் கேட்கலாம்.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால், பக்தி பாடல்களைக் கேட்கலாம். நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்; எதிர்மறை எண்ணங்கள் நீங்க வழி ஏற்படுத்தித் தரும்.

உற்சாகத்துக்கு ஊதுவத்தி, சாம்பிராணி!

ஊதுவத்தி, சாம்பிராணி வாசத்துக்கு மனஅழுத்தம் குறைத்து மன அமைதி அளிக்கும் சக்தி உண்டு. இவை, நேர்மறை சிந்தனை பிறக்க துணைபுரியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட மன அமைதிக்காகவும், நேர்மறை சிந்தனைகளை வளர்க்கவும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

கைகளைத் தட்டுதல்

ஒவ்வோர் அறையாகச் சென்று, சில நிமிடங்கள் கை தட்டுவது, அதிகப் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருமாம். இப்படி அடிக்கடி செய்வது நேர்மறையான சிந்தனைகளைக் கொடுக்கும். குழந்தைகளுக்கு இது சிறந்த புத்துணர்ச்சி டானிக்!

மரம், செடிகளை வளர்த்தல்

வீட்டின் அருகில் அல்லது மொட்டைமாடியில் அழகான மலர் செடிகளை வளர்க்கும் வாய்ப்பிருந்தால் உடனே அதைச் செய்யவும். இடம் இல்லை என்றால் ஜன்னல் ஓரங்களில்கூட பூந்தொட்டியை வளர்க்கலாம்.

தினசரி அதற்கு தண்ணீர் ஊற்றுவதையும் கவனிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதன் வளர்ச்சி உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதால், அதன் மூலம் உற்சாகம் பிறக்கும்.

தேவை நேர்மறை சிந்தனை

நாம் எவ்வளவுதான் நம் சிந்தனைகளை நேர்மறையை நோக்கி திசை திருப்பினாலும், நம் மனநிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது நீடிக்கும். எனவே, எப்போதும் எதிர்மறையாக ஏதாவது நடந்துவிடுமோ என்று சிந்திக்கவே சிந்திக்காதீர்கள்.

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். நேர்மறையான கண்ணோட்டத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ளுங்கள்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க