கர்ப்பப்பை வாய் புற்றுநோய் – எப்படி தோன்றுகிறது முதல் தடுப்பு முறைகள் வரை ஒரு அலசல்…

 
Published : Sep 19, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் – எப்படி தோன்றுகிறது முதல் தடுப்பு முறைகள் வரை ஒரு அலசல்…

சுருக்கம்

Cervical Cancer - How to Appear From First Preventive Methods

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியில், வெஜைனாவுடன் இணையும் கர்ப்பப்பை வாய் (Cervix) என்ற இடத்தில் வரக்கூடிய புற்றுநோய். தாம்பத்தியத்தின்போது பரவும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus-HPV) காரணமாகவே இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.

இதில், 150-க்கும் மேற்பட்ட சாதாரண வைரஸ்கள் உள்ளன. அவற்றில் 15 வகை வைரஸ்களால் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை உருவாக்க முடியும். அந்த 15 வகைகளில், ஹெச்பிவி 16 மற்றும் 18 ஆகியவை முக்கியமானவை.

ஹெச்.பி.வி வைரஸை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, தானாகவே அழித்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்களே பாதிக்கப் படுகின்றனர். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் தவிர, மலக்குடல்வாய் புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவற்றை உண்டாக்கும் ஆற்றல் படைத்தவை இந்த ஹெச்.பி.வி வைரஸ்கள்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால், தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய்தான்.

கர்ப்பப்பைவாய் சுவற்றில் உள்ள ஆரோக்கி யமான செல்கள் மாற்றம் அடையும்போது அபரிமிதமான வளர்ச்சியடைகின்றன. இந்த மாற்றத்துக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் காரணமாக இருக்கிறது.

ஆரம்ப அறிகுறிகள்.

ஆரம்பநிலையில் அறிகுறிகள் அதிகம் தென்படாத புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. தொடக்கத்தில் ஹெச்.பி.வி கிருமி, `ஜெனிட்டல் வார்ட்ஸ்’ (Genital Warts) எனப்படும் பாலுண்ணிகளைச் சருமத்தில் ஏற்படுத்தும்.

வெள்ளைப்படுதல், மாதவிலக்குக்கு முன்னும் பின்னும் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு, 40 வயதுக்கு மேற்பட்ட மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு ஏற்படும் திடீர் ரத்தப்போக்கு இவையே கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள்.

எப்படிப் பரவும்?

உடலுறவின்போது ஹெச்.பி.வி ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.

கர்ப்பப்பைவாயில் ஆணுறுப்பின் தோல் உராய்வதாலேயே, இந்த வைரஸ் பரவுகிறது.

ஹெச்.ஐ.வி கிருமியைப் (Human Immuno Deficiency Virus – HIV) போல விந்தணுக்கள் மூலமாகவோ, ரத்தத்தின் மூலமாகவோ இது பரவாது.

பல ஆண்களுடன் உடலுறவு, இளம் வயதில் திருமணம், ஹெச்.ஐ.வி கிருமி தாக்கம் ஆகியவற்றால், ஹெச்.பி.வி கிருமி பரவுகிறது.

வாய்வழி உறவு, பெண்கள் ஓரினச் சேர்க்கை ஆகியவற்றாலும் பரவும்.

ஹெச்.பி.வி தாக்கினாலே புற்றுநோய் ஏற்படுமா?

ஹெச்.பி.வி தொற்று, புற்றுநோய் செல்களை உருவாக்கலாம் அல்லது உருவாக்காமலும் போகலாம். ஹெச்.பி.வி கிருமி ஒருவர் உடலுக்குள் சென்று கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை உருவாக்க, குறைந்தது 10 வருடங்கள் ஆகும். இடைப்பட்ட காலத்தில், இந்த செல்கள் பலவித மாற்றங்களை அடைகின்றன.

நோய் கண்டறிதல் – சிகிச்சை

பாப் ஸ்மியர் (Pap Smear) சோதனை மூலமாகப் புற்றுநோய்க்கு முந்தைய நிலையைக் (Premalignant Stage) கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆரம்பநிலையில் மிகவும் எளிய அறுவை சிகிச்சைகளே போதுமானது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிடலாம்.

`ரேடியோதெரப்பி’ எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை மூலமாக கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் செல்களை அழித்துவிடலாம். இந்தச் சிகிச்சையால் மற்ற உடல் பாகங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

புற்றுநோய் செல்கள் கர்ப்பப்பை முழு வதும் பரவிவிட்டால், கர்ப்பப்பையை நிரந்தர மாக எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

தடுப்பு மருந்துகள்

கடந்த 10 வருடங்களுக்கு உள்ளாகத்தான் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பு மருந்துகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கின.

இந்தத் தடுப்பு மருந்துகள், தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்னர், 9-13 வயதுள்ள சிறுமிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். 25 வயது வரை இதற்கான தடுப்பு மருந்துகள் உள்ளன. அதற்கு மேல் அவற்றின் வீரியம் படிப்படியாகக் குறையும்.

நோயின் ஆரம்பநிலையில் சிகிச்சை எடுத்த பெண்களில் 80 முதல் 90 சதவிகிதம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க.

தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அதிக அமிலத்தன்மை உடைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஒமேகா 3, பாலிஅன்சாச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீரையே பயன்படுத்த வேண்டும்.

இந்தியப் பெண்களுக்கு மது மற்றும் புகைப் பழக்கம் அதிகம் இல்லை என்றாலும், இந்தப் பழக்கம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

குழந்தைப்பேற்றுக்கு மத்தியில் போதிய இடைவெளி இருக்க வேண்டும். காப்பர் டி உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாத விலக்கின்போது கட்டாயம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சானிட்டரி நாப்கின்களின் தரத்தைப் பரிசோதித்து வாங்க வேண்டும். நீண்ட நேரம் சானிட்டரி நாப்கினை வைத்துக்கொள்ளக் கூடாது. 3-4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றவேண்டியது அவசியம்.

கழிப்பறை மற்றும் வசிக்கும் இடத்தில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அறிகுறிகள் காட்டும் வரை பொறுத்திருக் காமல், இந்த நோய் வருவதற்கு முன் காப்பதே சிறந்தது. இளம்பெண்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்க, திருமணமானதும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு, கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்குத் தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கிறது. இதற்கான தடுப்பு மருந்து 9 வயது முதல் 13 வயதுக்குள் ஒவ்வொரு சிறுமிக்கும் கொடுக்கப்பட வேண்டும். வளரும் பருவத்தில் அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே, ஒரு டோஸ் மருந்தே போதுமானது.

இந்த வயதைத் தவறவிட்டவர்கள், 13 முதல் 15 வயதுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். 13 வயதுக்கு மேல் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். ஆகையால், இவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் தேவைப்படும். ஒரு ஊசி போட்ட பின்னர், ஆறு மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ஊசி போட வேண்டும்.

15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஊசிகள் தேவைப்படும். இவையெல்லாம் முதல் உடல் உறவு நடப்பதற்கு முன்னரே செய்துவிட வேண்டும். கவனம். ஹெச்.பி.வி பெருகிவிட்ட பின்னர், தடுப்பு மருந்து பயன்படாது.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க