
தற்போது பலர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கம், சத்தம், பசி போன்றவை இதற்கு காரணமாகின்றன. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஒற்றை தலைவலி குறையாத போது சிலர் வீட்டு வைத்தியங்களையும் முயற்சிக்கின்றனர்.
அந்தவகையில், எலுமிச்சை ஜூஸ் குடித்தால் ஒற்றைத் தலைவலி குறையும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இது குறித்து ஒருவர் தனது அனுபவத்தையும் சமூக ஊடகத்தில பகிர்ந்து கொண்டார். அதாவது, தனக்கு ஒற்றைத் தலைவலி அதிகமாக இருக்கும் போது எலுமிச்சை சாறு குடித்ததால் வலி குறைந்ததாக அந்த நபர் கூறினார். ஆனால் இந்த வைத்தியம் அனைவருக்கு பலன் அளிக்குமா? இதற்கான பதிலை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவர்களின் கூற்று..
மருத்துவரின் கூற்றுப்படி, எலுமிச்சை சாறு குடித்தால் ஒற்றை தலைவலி குறையும் என்று சொல்லப்படவில்லை. நவீன மருத்துவத்தில் கூட இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆகவே ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வலியுள்ள இடத்தில் ஐஸ் கட்டி வைத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். இது தவிர வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்தால் வலி குறையும்.
தீர்வு உண்டா?
ஒற்றை தலைவலி வருவதற்கான காரணத்தை அறிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வெயிலில் அதிக நேரம் இருந்தால் ஒற்றைத் தலைவலி வரும். எனவே வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ், குடை, தொப்பி போன்றவை பயன்படுத்துங்கள். அதுபோல செல்போன், லேப்டாப் அதிகநேரம் பார்த்தாலும் ஒற்றைத் தலைவலி வரும். எனவே அவற்றை பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஹெட் போனில் அதிக நேரம் பாட்டு கேட்டாலும் ஒற்றை தலைவலி ஏற்படும்.
குறிப்பு : ஒற்றைத் தலைவலிக்கு எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது என்று சமூக ஊடகங்களில் பரவினாலும், மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.