
பேறு காலத்தில் சரியாக சாப்பிடாததால் ஏற்படும் பிரச்சனைகள் தாய்மை என்று வரும் போது, சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். பேறு காலத்தில் சரியான சத்துக்கள் நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும்.
ஒருவேளை நீங்கள் பேறு காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால், முதலில் பாதிக்கப்படப்போவது வயிற்றில் வளரும் குழந்தை தான். எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டாவது கர்ப்பிணிகள் நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து காண்போம்.
கர்ப்பிணிகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைக்கு பல்வேறு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படும். இன்னும் சில சமயங்களில், ஊட்டச்சத்து குறைபாடு குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்தால், அதனால் கருவில் வளரும் சிசு இறக்கும் வாய்ப்புள்ளது. இது மிகவும் அரிது தான். இருப்பினும், இம்மாதிரியான நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிகள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.