நடிகர் சரத்பாபுக்கு செப்சிஸ் பாதிப்பு.. இந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன? செப்சிஸ் வந்தால் என்னாகும் தெரியுமா?

By Ma riya  |  First Published Apr 26, 2023, 6:39 PM IST

நடிகர் சரத்பாபுவிற்கு ஏற்பட்டுள்ள செப்சிஸ் எனும் நோய் பாதிப்பு மற்றும் அதன் அறிகுறிகளின் விளக்கம்.. 


கடந்த 1971-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'பட்டின பிரவேசம்' படம் தான், தமிழ் திரையுலகில் நடிகர் சரத்பாபுவின் அறிமுக திரைப்படம். ஆந்திராவில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகராக வலம் வந்தார். இவர் தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த முத்து, அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் இப்போதும் பேசப்படுபவை. 

தற்போது 71 வயது ஆகும் நடிகர் சரத்பாபுவிற்கு செப்சிஸ் எனும் செப்டிசீமியா நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக கடந்த மாத இறுதியில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஐசியூவில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். செப்சிஸ் அவ்வளவு கொடிய நோயா? அதன் முழுவிவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

Latest Videos

undefined

செப்சிஸ் என்றால் என்ன?  

செப்சிஸ் என்பது உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும் கொடிய நிலை. அதாவது நம் உடலில் தொற்று தீவிரமாக இருக்கும் நிலையை செப்சிஸ் என்பார்கள். மனிதர்களின் உடலில் தொற்றுநோய் பாதிப்பு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதை போராடி அழிக்கும். சாதாரண தொற்று நோய்களுக்கு நல்ல உணவு பழக்கமும், நோய் எதிர்ப்பு சக்தியும் போதும். விரைவில் குணமாகிவிடும். ஆனால் மனித உடலை தாக்கும் வீரியம் அதிகமாக இருக்கும் தொற்று ஏற்பட்டால், உடலில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியால் நீண்ட காலம் அந்த தொற்றுடன் போராடமுடியாது. காய்ச்சல் மாதிரியான அறிகுறிகள் வந்துவிடும். உடலின் எந்த உறுப்பில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ அதை பொறுத்து அறிகுறிகளும் வேறுபடும். 

எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஃபுட் பாய்சன் மாதிரியான தொற்று ஏற்பட்டால், வயிற்று வலி, வாந்தி, பேதி ஆகிய அறிகுறிகள் உடனே வந்துவிடும். அப்போது மருத்துவர் நோய் தடுக்கும் மருந்துகளை கொடுப்பார். ஆனால் இதற்கு அடுத்த நிலை தான் வீரியமான தொற்று. இதனை நோய் எதிர்ப்பு சக்தியால் வீழ்த்த முடியாது. மருத்துவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல் மாத்திரைகளாலும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் உடலின் உறுப்புகள் பாதிப்படைய தொடங்கும். இந்த தொற்று உங்களுடைய சிறுநீர் பாதையில் உண்டாகி இருந்தால், உங்களுடைய இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படையும். அடுத்தக்கட்டமாக இதயத்தில் பாதிப்பு வரும். ரத்த அழுத்தம் கூட குறைந்துவிடும். இதற்கு அடுத்த கட்டமாக நுரையீரலுக்கு தொற்று பாதிப்பு வரும். இதையே ஏ.ஆர்.டி. சிண்ட்ரோம் (Acute Respiratory Distress Syndrome) என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி தொற்று பாதிப்பு உடலில் பரவி பல உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நோயாளி சுயநினைவை இழக்க கூட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். செப்சிஸ் உங்களுக்கு அப்படியான பாதிப்பை தான் உண்டாக்கும். 

செப்சிஸ் தாக்கம் 

முதலாவதாக ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டு பிற உறுப்புகளையும் பாதிப்படைய செய்வதை தான் செப்சிஸ் அல்லது செப்டிசீமியா என்று அழைக்கிறோம். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒரு நபருக்கு செப்சிஸ் பாதிப்பு ஏற்பட்டால் துணை மருந்துகள், பிற சிகிச்சைகள் தேவைப்படுகிறது. 

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் காயம் ஒருபோதும் குணமாகாதா? உண்மை என்ன?

தொற்று பாதிப்பு யாருக்கு வரும்? 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலகட்டங்களில் தான் செப்சிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் ஆட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் விதமான மருந்துகள் அளிக்கப்படும். அப்போது அவர்களுக்கு தற்காலிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சிலருக்கு இந்த நேரத்தில் செப்சிஸ் வரலாம். 

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு கீமோதெரபி செய்யும்போது, அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். அந்த சமயங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் அந்த நபருக்கும் செப்சிஸ் வரும் அபாயம் உள்ளது.

வயது முதுமையில் செப்சிஸ் வரலாம். அதாவது 70 முதல் 80 வயதுவரை ஆனோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி தானாக குறையும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளோருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இவர்களை செப்சிஸ் நோய் தாக்கும் அபாய கட்டத்தில் தான் இருக்கிறார்கள். 

ஆக, ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால் செப்சிஸ் மாதிரியான தொற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இதுவரை நீங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளாவிட்டாலும் இனியாவது அக்கறை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களை கூடுதல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: தினமும் ஒரு வெள்ளரி இவ்வளவு நன்மைகளா! ஆனா வெள்ளரிகாய் சாப்பிடும்போது இதை மட்டும் சாப்பிடாதீங்க!

click me!