மாம்பழங்கள் இயற்கையில் பழுத்ததா அல்லது கார்பன் வைத்து பழுக்க வைத்ததா என்பதை அறிந்து கொள்ள 3 ஈஸியான வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம். தங்கம் போல் மின்னும் மாம்பழம்!
கோடைகாலத்தில் கொளுத்தும் வெயில் ஒரு பக்கம் என்றாலும் பழுத்த மாம்பழங்களை பார்த்தால் அனைத்தையும் நாம் மறந்து விடுவோம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த தித்திப்பான மாம்பழங்களை சுவைத்திட நம்மில் பலரும் வெகு நாட்களாக காத்து கொண்டு இருப்போம். ஏனென்றால் வாழைப்பழம், கொய்யா பழம், பப்பாளி போன்று இல்லாமல் மாம்பழம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதுவும் குறிப்பாக கோடை காலத்தில் மட்டுமே கிடைக்க கூடிய சீசன் ஃபுரூட் ஆகும்.
பொதுவாக சீசனல் பழங்கள் அல்லது காய்கறிகளை அந்தந்த காலங்களில் நாம் அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்கள் மற்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இப்போது நாம் சாலைகளில் செல்லும் போது பளபளவென்றும் , தகதகவென்றும் மின்னும் மாம்பழங்களை கொட்டிக் கிடப்பதை நாம் பார்க்கும் போது அப்படியே வாங்கி வீட்டிற்கு சென்று உடனே சுவைத்திட தோன்றும்.
ஆனால் மாம்பழங்களை வாங்கும் முன்பு, மாம்பழங்கள் இயற்கையாக பழுத்ததா அல்லது கார்பன் வைத்து பழுக்க வைத்தா என்பதை நாம் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். கார்பன் வைத்து பழுக்க செய்த மாம்பழங்கள் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் நாம் இயற்கையில் பழுத்த மாம்பழங்களை வாங்கி சுவைப்பதே நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
மாம்பழங்கள் இயற்கையில் பழுத்ததா அல்லது கார்பன் வைத்து பழுக்க வைத்ததா என்பதை அறிந்து கொள்ள 3 ஈஸியான வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.
நிறம்:
கார்பன் கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்த்தின் நிறம் வெளிர் / அடர் மஞ்சள் கலந்த நிறத்தில் காணப்படும். மாம்பழம் முழுதாக பழுக்கவில்லை என்பதை இது உணர்த்தும்.
செயற்கையாக பழுக்க செய்த மாம்பழங்கள் பார்வைக்கு பழுத்தது போன்று இருக்கும் ஆனால் உள்ளே காயாக தான் இருக்கும். தவிர பழத்தின் தோலில் சிறிய வட்ட வடிவிலான கரும்புள்ளிகள் ஆங்காங்கே காணப்படும்.
கார்பன் கொண்டு பழுக்க செய்த மாம்பழங்கள் பளபளவென்று கண்ணுக்கு கவர்ச்சியாகத் தெரியலாம். ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். .ஆகையால் இயற்கை முறையில் பழுத்த மாம்பழத்தினை வாங்குவதே சிறந்தது.
சுவை:
மாம்பழங்களை வாங்கும் முன்பு ஒரே ஒரு மாம்பழத்தை மட்டும் வாங்கி அல்லது (எடுத்து விற்பனையாளரின் அனுமதியுடன்) வெட்டி ஒரு சிறிய துண்டு சாப்பிட்டு பார்க்க வேண்டும். இப்படி சாப்பிட்ட பின் உங்களது நாக்கின் சுவை மொட்டுகள் கொஞ்சம் எரியும் உணர்வு ஏற்பட்டால் அது கார்பைட் மாம்பழம் என்று தெரிந்து கொள்ளலாம். இயற்கையாக பழுத்த மாம்பழத்தை சாப்பிட்டால் அந்த மாதிரியான உணர்வு ஏற்படாது. இயற்கையான மாம்பழத்தை சுவைக்கும் போது இனிப்பு சுவையை மட்டுமே தரும்.
ஜூஸ்/சாறு :
செயற்கையாக பழுக்க செய்த மாம்பழத்தில் சாறு பிழிய வராது அல்லது மிகக் குறைந்த அளவிலான சாறு வரும். இயற்கையாக பழுத்த மாம்பழத்தின் உள்ளே நிறைய சாறு இருக்கும். இவையே மாம்பழங்களை கண்டறிய உதவும் சோதிப்பதற்கான முக்கிய வழி ஆகும்.
கார்பைடு மாம்பழங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை, வாந்தி, வயிற்றுப போக்கு போன்றவை ஏற்படும். ஆகவே இனி மாம்பழத்தை வாங்கும் முன் இப்படி பரிசோதித்து பின் மாம்பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.
சித்திரை மாத ராசி பலன் 2023: சூரிய குபேர யோகத்தால் செல்வ செழிப்புடன் இருக்க போகும் 4 ராசிகள்!