
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்ற குறளில் சொல்வதை போலவே ஒருவர் வார்த்தைகளால் பேசும் போது ஏற்படும் காயம் மனதை அரித்து கொண்டே இருக்கும். ஒரு வார்த்தைக்கு உறவை சேர்க்கும் பலமும் உண்டு; உறவை ஒட்டுமொத்தமாக பிரிக்கும் ஆற்றலும் உண்டு. அதனால் நாம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கணவன், மனைவி உறவுக்குள் சில வார்த்தைகளை பேசவேகூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றார்கள். இந்தப் பதிவில் கணவன் மனைவி உறவு மேம்பட அதில் எந்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என காணலாம்.
பொதுவாக உறவுகள் தொடக்க காலத்தில் இருப்பது போல சில காலத்திற்கு பின்னர் இருப்பதில்லை. முதல் சந்திப்பில் இருக்கும் தித்திப்பான வார்த்தைகள் சில வருடங்களுக்கு பின்னர் காணாமல் போய்விடுகின்றன. இது நடத்தையிலும் வெளிப்படுகிறது. கோபத்தில் என்னென்னவோ பேசிவிட்டு பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்டாலும், பேசிய வார்த்தைகளின் வலியும் அந்த தருணத்தில் ஏற்பட்ட வேதனையும் மாறுவதில்லை.
கோபத்தை வெளிப்படுத்துவது தவறு இல்லை. ஆனால் கோபத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய துணையின் மனதில் வலியை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வதோடு நிறுத்தி விடாமல் அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது அவசியம்.
எந்த வார்த்தைகளை சொல்லக் கூடாது?
"உனக்கு அறிவே இல்ல"
"சின்ன விஷயத்துக்கு தேவையில்லாம சண்டை போடுற"
"இது ஒரு விஷயமே இல்ல"
"நீ சின்ன விஷயத்துக்கும் உணர்ச்சிவச படுற"
சில நேரங்களில் நமக்கு பெரிய விஷயங்களாக தெரியாதவை நம்முடைய துணைக்கு பெரியவையாக இருக்கலாம். அவை அவர்களின் மனதை உண்மையில் காயப்படுத்தி இருக்கலாம். அந்த விஷயத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அதை ஒரு விஷயமே இல்லை என்று கூறக்கூடாது. அது மட்டுமின்றி ஒவ்வொரு பிரச்சனைக்கு பிறகும் யார் மன்னிப்பு கேட்கிறார்கள்? யார் அந்த உறவை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்? போன்ற விஷயங்களை கணக்கிட்டு சொல்லக் கூடாது. "நான் செய்தேன், நீ செய்யவில்லை" என்று குற்றப்படுத்தக்கூடாது இது உறவில் பிரச்சனைகளை அதிகமாக்கும்.
இப்படி பேசுவதால் உங்களுடைய துணை நீங்கள் அவரை நிராகரிப்பதாக நினைக்கக்கூடும் அவர்களுக்கு எந்த எதுவும் நீங்கள் கொடுக்காமல் இருப்பதாக உணர வைக்கும் நீங்கள் பிரச்சனையை சரி செய்ய நினைத்தாலும் உங்களுடைய இந்த வார்த்தைகள் பிரச்சனையை வளர்க்கவே செய்யும்.
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உங்களுடைய வாழ்க்கை துணையிடம் இந்த மூன்று விஷயங்களையும் ஒருபோதும் சொல்ல வேண்டாம். இது அவர்களை வேதனை அடையச் செய்யும். உங்களுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வழிவகை செய்யக்கூடியது.