சுவைக்க சுவைக்க ருசிக்கத் தோன்றும் ''மணத்தக்காளி வத்தக் குழம்பு''!

By Dinesh TG  |  First Published Nov 21, 2022, 2:24 PM IST

இன்று நாம் மணத்தக்காளி வைத்து வத்தக்குழம்பை வீட்டில் சுவையாக செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தினமும் குழம்பு, சாம்பார்,ரசம் என்று சாப்பிட்டவர்களுக்கு ஒரு மாற்றாக வத்த குழம்பு செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்?  வத்தக்குழம்பு என்றாலே பலருக்கும் நாவூற ஆர்மபித்து விடும். 

இதன் சுவையை வார்த்தைகளால் அளவிட முடியாது குறிப்பாக, சைவ பிரியர்களுக்கு வத்தக்குழம்பு ஒன்று போதும். வேறு எதுவும் தேவை இல்லை. அதனையே ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடுவார்கள். வத்தக்குழம்பு சுவைக்கு ஈடாக வேறு எதுவும் இருக்காது என்று கூட சொல்லலாம்.அப்படி சுவையான வத்தக் குழம்பில் பல விதங்கள் இருக்கின்றன.சுண்டக்காய் வத்தக் குழம்பு, மாங்காய் வத்தக் குழம்பு, பாகற்காய் வத்தக் குழம்பு என்று பல விதங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதமான சுவையை தருகின்றன.

Tap to resize

Latest Videos

அந்த வகையில் இன்று நாம் மணத்தக்காளி வைத்து வத்தக்குழம்பை வீட்டில் சுவையாக செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி வத்தல் – கையளவு 
புளி – கையளவு 
சின்ன வெங்காயம் – 10
பூண்டு பற்கள் – 10
கடுகு – 1/4 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு –1/4 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் 
நல்லெண்ணெய் – 5ஸ்பூன்
உப்பு தேவையான அளவு 

தேவையான பொருட்கள்:

மல்லி விதை – 2 ஸ்பூன்
துவரம் பருப்பு –1 ஸ்பூன் 
மிளகு – 1 ஸ்பூன் 
சீரகம் – 1 ஸ்பூன் 
வெந்தயம் – 1/4ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு-தேவையான அளவு

சத்தான தினை ஆப்பம் செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க! 

செய்முறை :

அடுப்பில் ஒரு கனமான வாணலி ஒன்று வைத்து,அதில் மல்லி விதைகளை போட்டு நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொண்டு ,பின் வெந்தயம், மிளகு, சீரகம், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்துக் கொண்டு அதனை தனியாக எடுத்து ஆற வைத்து விட வேண்டும். 

அனைத்தும் ஆறியபிறகு ,1 மிக்சி ஜாரில் போட்டு,அதனுடன் 4 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, புளிக்கரைசல் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் வாணலி வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு மணத்தக்காளி வத்தல் போட்டு லேசாக வறுத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி,கடுகு ,உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொண்டு, பின் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். 

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் ,மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொண்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

கொதிக்க ஆரம்பிக்கும் போது, வறுத்து எடுத்து வைத்துள்ள மணத்தக்காளி வத்தல்களை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, சுண்ட கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்றாக சுண்ட வற்றி வரும் போது சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்ளோதாங்க சுவையான மனதை அள்ளும் மணத்தக்காளி வத்தல் குழம்பு ரெடி!
 

click me!