
நாம் அனைவருக்கும் தினமும் மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. மாலை நேர சிற்றுண்டி என்றழைக்கப்படும் வாழைப்பூ வடையை டீ அருந்தும் போது சட்னியை வைத்து சாப்பிட அதன் சுவையோ மனதை அள்ளும் வகையில் இருக்கும். இந்த வடையை ஜில்லென்று பெய்யும் மழையில் மாலை வேலையில் சுட சுட எண்ணெயில் போட்டு பொரித்து சட்னியுடன் வைத்து சாப்பிடுகையில் அதன் டேஸ்ட்டை வார்த்தைகளில் அளவிட முடியாது.
இந்த வடையானது வெளியில் சாப்பிடும் பொழுது மொறு மொறுவென்றும் உள்ளே மிக சாஃப்டாகவும் இருக்கும். இதில் கடலைப் பருப்புடன் வாழைப் பூவும் சேர்த்து செய்யப்படுகிறது .இந்த வடையானது சுவையோடு ஆரோக்கியத்தையும் நமக்கு அளிப்பதால் இது குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி என்று கூறலாம்.
அந்த வகையில் இன்று சத்தான மற்றும் சுவையான வாழைப் பூ வடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வாழைப் பூ -1
கடலை பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
வர மிளகாய் -3
பூண்டு - 8 பல்
1 1/2 ஸ்பூன் - சீரகம்
தேவையான அளவு - மல்லித்தழை
தேவையான அளவு - கருவேப்பிலை
தேவையான அளவு - எண்ணெய்
தேவையான அளவு - உப்பு
செய்முறை:
முதலில் கடலை பருப்பை கிட்டத்தட்ட 4 நான்கு மணி நேரம் ஊற வைத்து, பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைப் பூவை உரித்து சுத்தம் செய்து பூவினிலுள்ள மெல்லிய நரம்புகளை அகற்றிவிட்டு பொடியாகஅரிந்து மோர் கலந்த சேர்த்த தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு, பூண்டு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கொரகொரவென அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்த கலவையுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவினை சேர்த்து ஒன்றுடன் ஒன்று இணையும் படி பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது இதில் வெங்காயம், கறிவேப்பிலை,சீரகம், பச்சை மிளகாய் , மல்லித்தழை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும், எண்ணெய் காய்ந்த பின் ,மாவினை சிறிது கையில் எடுத்து வடை தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு, தீயனை மிதமாக வைத்து வடை இரண்டு புறமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க சுவையான, சத்தான மற்றும் ஆரோக்கியமான வாழைப் பூ வடை ரெடி!