ருசியான "மசாலா சப்பாத்தி" சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 6:50 PM IST

வாருங்கள்! சுவையான மசாலா சப்பாத்தியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


தினமும் செய்யும் இட்லி,தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் டிஃபரெண்டாக சிறிது மசாலா சேர்த்து செய்ய உள்ளோம். கோதுமை மாவினை சேர்த்து செய்யப்படும் இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும் , அசத்தலாகவும் இருக்கும். 

Latest Videos

undefined

வாருங்கள்! சுவையான மசாலா சப்பாத்தியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு - ஒரு கப் 
ஓமம் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
தனியா தூள்-1 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 
கறிவேப்பிலை - கையளவு 
மல்லித்தழை - கையளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

முதலில் சின்ன வெங்காயம், மல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகாய்தூள் ,தனியா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். 

பிசைந்த மாவினில் இப்போது பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித் தழை, பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய், பொடியாக அரிந்து வைத்துள்ள கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். 

பின் பிசைந்த மாவினில் ஓமம், பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் முதலியவற்றை சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ள வேண்டும். பின் மாவினை சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். 

1/2 மணி நேரம் கழித்து மாவினை ஒரு முறை பிசைந்து , பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின் சப்பாத்தி கல்லில் போட்டு ஒவ்வொரு உருண்டினையும் வட்ட வடிவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து, தோசைக்கல் சூடான பின் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுட்டு எடுத்தால் சுவையான மசாலா சப்பாத்தி ரெடி!

click me!