கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிபிஎஸ்ஸின் '60 மினிட்ஸ்' (60 Minutes) நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் ரகசியமாக நிலத்தடி அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும், அமெரிக்காவும் அதைப் பின்பற்றும் என்றும் கூறினார்.
"ரஷ்யா பரிசோதனை செய்கிறது, சீனாவும் பரிசோதனை செய்கிறது, ஆனால் அவர்கள் அதைப் பற்றிப் பேசுவதில்லை. பரிசோதனை செய்யாத ஒரே நாடாக அமெரிக்கா இருப்பதை நான் விரும்பவில்லை," என்று கூறிய டிரம்ப், இந்தப் பட்டியலில் வட கொரியா மற்றும் பாகிஸ்தானும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அணுகுண்டு வெடிப்பு இல்லாமல் செய்யப்படும் 'அணுசக்தி அல்லாத' (non-critical explosions) அமைப்புகள் தொடர்பான பரிசோதனைகளையே அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கியுள்ளனர். எனினும், ட்ரம்ப் தான் முழுமையான அணு குண்டு வெடிப்பு பரிசோதனைக்கு உத்தரவிட்டது போல பேசினார்.
வட கொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் பல ஆண்டுகளாக அணு குண்டு வெடிப்புப் பரிசோதனையை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா கடைசியாக 1990இலும், சீனா 1996இலும் அணு குண்டு வெடிப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டன. 1996ஆம் ஆண்டு முதல் விரிவான அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் (CTBT) அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது, இது அனைத்து அணு குண்டு வெடிப்புப் பரிசோதனைகளையும் தடை செய்கிறது.