வங்கதேசத்தில் அரசு பணிகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் கிளர்ச்சியாக மாறி வன்முறை வெடித்தது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் ஷேக் ஹசீனா பதவி விலகியதோடு நாட்டை விட்டும் வெளியேறினார். தொடர்ந்து, ராணும் ஆட்சியை கைப்பற்றிக்கொண்டது. இருப்பினும், நாடு முழுவதும் தொடர் கலவரங்கள் வெடித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி ராணுவ ஜெனரல் வகார்-உஸ்-ஜமான் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவின் ராணுவ விமானம், டெல்லியை அடுத்த காசியாபாத்தில் ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அங்கு தனது மகளை சந்தித்த ஷேக் ஹசீனா, லண்டனில் தஞ்சமடைய உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா, இனி அரசியலுக்கு மீண்டும் திரும்பமாட்டார் என்றும், வங்கதேசத்திற்கும் வரமாட்டார் என்றும் அவரது மகன் சஜீப் ஜாய் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறை வெறியாட்டத்தால், கடந்த 4-ம் தேதி முதலே பதவி விலகுவது குறித்து என் தாயார் ஷேக் ஹசீனா பரிசீலித்து வந்தார். ஆயினும் நாட்டை விட்டு வெளியேற அவர் தயக்கம்காட்டி வந்தார். நான் உட்பட குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
என் தாயார் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது வங்கதேசம் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக பார்க்கப்பட்டது. ஒரு பின்தங்கிய ஏழை நாடாக இருந்தது. ஆனால் இப்போது, ஆசியாவில் எழுச்சி பெறும் நாடுகளில் ஒன்றாக உள்ளதாக கூறினார். இனிமேல் அவர் அரசியலுக்கு திரும்பமாட்டார் என்று கூறிய சஜீப் ஜாய், அவர் வங்கதேசத்திற்கும் வரமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.