இந்த சட்டத் திருத்தத்தின் கீழ், நாட்டின் பிரதமர் அளிக்கும் ஆலோசனையின் பேரில், ராணுவத் தளபதியையும் முப்படைகளின் தலைமைத் தளபதியையும் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
முப்படைகளின் தலைமைத் தளபதியாகச் செயல்படும் ராணுவத் தலைமை தளபதி, பிரதமருடன் கலந்தாலோசித்து, தேசிய மூலோபாய கட்டளையின் (National Strategic Command) தலைவரை நியமிப்பார். இப்பதவியில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியே இருப்பார் என்றும் மசோதா குறிப்பிடுகிறது.
தற்போதுள்ள கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் என்ற பதவி, நவம்பர் 27, 2025 அன்று காலாவதியாகும் என்றும் மசோதா கூறுகிறது. இதன் மூலம், முனிரின் கட்டளைக் கட்டமைப்பின் கீழ் நாட்டின் உயரிய ராணுவ அதிகாரம் ஒருங்கிணைக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் மூலம், 'ஃபீல்ட் மார்ஷல்' (Field Marshal) என்ற பதவிக்கு வாழ்நாள் சலுகைகள் உண்டு. சமீபத்தில் ஜெனரல் ஆசிம் முனீர் 'ஃபீல்ட் மார்ஷல்' தரத்திற்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியைப் பெறும் நாட்டின் இரண்டாவது அதிகாரி இவராவார்.