ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், பிரேசில் மாடல் லாரிசாவின் புகைப்படம் பல பெயர்களில் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். இதை குறித்து மாடல் லாரிசா, அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி வாக்காளர் பட்டியலில் மோசடி செய்ததாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் மாடல் லாரிசாவின் புகைப்படம் பல பெயர்களில் இடம்பெற்றதாகவும் அவற்றைப் பயன்படுத்தி போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்ட பிரேசில் மாடல் லாரிசா தனது படம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து அதிர்ச்சியுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
24
அதிர்ச்சி அடைந்த லாரிசா
ஒரு வீடியோ மூலம் இந்த விவகாரத்திற்குப் பதிலளித்த பிரேசில் மாடல் லாரிசா, தான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
"நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு நகைச்சுவையைச் சொல்லப் போகிறேன் - அது மிகவும் பயங்கரமானது! இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்காக, என்னுடைய பழைய புகைப்படத்தைப் பயன்படுத்தி, என்னை ஒரு இந்தியராகக் காட்டியிருக்கிறார்கள். என்ன குழப்பம் இது! ஒரு நிருபர் நேர்காணலுக்காக நான் வேலை செய்யும் அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். ஒரு நண்பர் அந்தப் புகைப்படத்தை எனக்கு மீண்டும் அனுப்பியபோது என்னால் நம்பவே முடியவில்லை," என்று லாரிசா தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
34
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ராகுல் காந்தி ஹரியானா தேர்தல் குறித்து "ஹெச் ஃபைல்ஸ்" (H-Files) என்ற தலைப்பில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஹரியானாவில் வாக்காளர்களின் பட்டியலில் எட்டில் ஒருவர் போலியானவர் என்றும், சுமார் 25 லட்சம் கள்ள ஓட்டுகள் பதிவுசெய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த மோசடிக்கு ஆதாரம் காட்டிய ராகுல் காந்தி, லாரிசாவின் புகைப்படம் சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, ரஷ்மி மற்றும் வில்மா போன்ற பல பெயர்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
"யார் இந்தப் பெண்? இவர் எங்கிருந்து வந்தார்?" என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, “இந்தப் பெண் இந்தியர் அல்ல; இவர் ஒரு பிரேசில் மாடல். இவரது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
ராகுலின் குற்றச்சாட்டுகளைப் பலப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிரேசிலைச் சேர்ந்த மேத்யூஸ் ஃபெரோரோ (Matheus Ferroro) எடுத்த புகைப்படம், ஹரியானாவில் ஸ்வீட்டி முதல் சரஸ்வதி வரை வெவ்வேறு பெயர்களில் 22 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.