
செவ்வாய் கிரகம் வறண்டு, உயிர்கள் வாழத் தகுதியற்றதுமாக இருக்கிறது. அதே சமயம் பூமி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. இந்த மர்மத்திற்கான ஒரு காரணத்தை நாசா ரோவர் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் ஆறுகள் பாய்ந்திருக்கின்றன. ஆனாலும், அது பெரும்பாலும் ஒரு பாலைவன கிரகமாகவே மாற உள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.
தற்போது செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தவிர, உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதன் சிவப்பு மேற்பரப்பு பண்டைய ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்த அடையாளங்களைக் காட்டுகிறது. இது செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீர் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. இதனால், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகம் உயிர்கள் வாழ்வதற்கு உகந்ததாக இருந்தது எப்படி என்பதை ஆராய்வதற்காக பல ரோவர்கள் தற்போது செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் புதிதாக ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியது. செவ்வாய் கிரகத்தில் கார்பனேட் தாதுக்கள் நிறைந்த பாறைகள் இருப்பதை அது கண்டுபிடித்தது. இந்த கார்பனேட்டுகள் பூமியில் உள்ள சுண்ணாம்புக்கல் போன்றவை. இவை கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் இருந்து உறிஞ்சி பாறைகளில் அடைத்து வைக்கின்றன.
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, இந்த பாறைகளின் இருப்பு செவ்வாயின் கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றும் என்பதை விளக்கியுள்ளது.
செவ்வாயில் ஒரு காலத்தில் குறிப்பிட்ட இடங்களில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததாகத் தோன்றுகிறது. ஆனால், பாலைவனச் சோலை போல கிரகத்தின் சில பகுதிகள் மட்டுமே உயிர் வாழும் வகையில் இருந்திருக்கும் என கியூரியாசிட்டி குழுவின் உறுப்பினரும், சிகாகோ பல்கலைக்கழகத்தின் கோள் விஞ்ஞானியுமான எட்வின் கைட் கூறுகிறார்.
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு பூமியை வெப்பமாக்குகிறது. இதனால் நீண்ட கால அளவில், கார்பன் கார்பனேட்டுகள் போன்ற பாறைகளில் சிக்கிவிடும். பின்னர் எரிமலை வெடிப்புகள் ஏற்படும்போது மீண்டும் வளிமண்டலத்திற்குள் வருகின்றன. இது தொடர்ந்து நீர் ஓட்டத்தை ஆதரிக்கும் மிகவும் சமநிலையான காலநிலை சுழற்சியை உருவாக்குகிறது.
இருப்பினும், பூமியுடன் ஒப்பிடும்போது செவ்வாயில் எரிமலை வாயு வெளியேற்ற விகிதம் குறைவாக உள்ளது என்று கைட் கூறுகிறார். இது காலநிலை சமநிலையைச் சீர்குலைத்து, செவ்வாயை மிகவும் குளிராகவும், மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகவும் ஆக்குகிறது. செவ்வாயில் திரவ நிலை நீர் இருந்த குறுகிய காலத்திற்குப் பிறகு, தொடர்ந்து 100 மில்லியன் ஆண்டுகள் அது பாலைவனமாக இருந்தது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
செவ்வாய் கிரகத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஆழமான நிலத்தடி நீர் பைகள் இருக்க வாய்ப்புள்ளது என்று கைட் கூறினார். 2021 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவரும், வறண்ட ஏரியின் விளிம்பில் கார்பனேட்டுகளின் அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளது எனச் சுட்டிக்காட்டுகிறார்.
விஞ்ஞானிகள் மேலும் கார்பனேட்டுகளின் ஆதாரங்களைக் கண்டறிய முடியும் நம்புகின்றனர். செவ்வாய் மேற்பரப்பில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வருவதே அதற்கு சிறந்த வழி. அடுத்த பத்தாண்டுகளில் இதைச் செய்ய அமெரிக்காவும் சீனாவும் போட்டியிடுகின்றன.
விஞ்ஞானிகள் இன்னொரு பெரிய கேள்விக்கும் பதிலைத் தேடுகிறார்கள். பூமி போன்ற உயிர்கள் வாழக்கூடிய கிரகங்கள் எவ்வளவு உள்ளன? 1990 களின் முற்பகுதியில் இருந்து நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே கிட்டத்தட்ட 6,000 கிரகங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பாறைகளை ஆய்வு செய்வது அந்த கிரகத்தின் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. செவ்வாயில் நீர் நிறைந்த காலங்களில் சிறிய நுண்ணுயிரிகள்கூட இல்லை என்று தீர்மானித்தால், பிரபஞ்சத்தில் உயிர்களின் தோற்றம் பற்றிய ஆய்வைத் தொடங்குவது கடினம். பண்டைய உயிர்களின் ஆதாரத்தை நாம் கண்டுபிடித்தால், அது உயிர்களின் தோற்றம் பற்றிய புரிதையை அதிகரிக்கும் என விஞ்ஞானி கைட் கூறுகிறார்.