
மொராக்கோவின் கொடூர செயல்
பிஃபா 2030 (FIFA 2030 உலகக் கோப்பை கால்பந்து தொடரை மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. உலகக் கோப்பை கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்க மொராக்கோ நாடு இப்போதே திட்டமிட்டு வருகிறது. இதற்காக அந்த நாடு செய்து வரும் ஒரு செயல் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்பாக நகரங்களை சுத்தம் செய்யும் வகையில் சுமார் 30 லட்சம் தெருநாய்களைக் கொல்ல மொராக்கோ அர்சு திட்டமிட்டுள்ளது. அங்கு இப்போதே பல ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதாவது நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்படுவதாகவும், சுடப்படுவதாகவும், மின்சாரம் பாய்ச்சி கொல்லப்படுவதாகவும் வலிமிகுந்த சாதனங்களைப் பயன்படுத்தி பிடித்து பின்பு குடோனுக்கு சென்று கொடூரமாக கொல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபிஃபா வேடிக்கை பார்க்கிறது
அங்கு நாய்கள் கொடூரமாக கொல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள விலங்கு நலக் குழுக்களும், ஆர்வலர்களும் மொராக்கோ அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2024ம் ஆண்டில் மொராக்கோ அதிகாரிகள் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டதாக உறுதியளித்த போதிலும், இந்த படுகொலை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு கூட்டணி ( IAWPC) குற்றம்சாட்டியுள்ளது.
மொராக்கோவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் ஜேன் குடால், ஃபிஃபாவின் பொதுச் செயலாளர் மத்தியாஸ் கிராஃப்ஸ்ட்ரோமுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ''மொராக்கோவில் தெரு நாய்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களில் பலர் விலங்கு பிரியர்கள்.
அவர்கள் இந்த மிருகத்தனத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துப்போய் உள்ளனர். ஆனால் இந்த கொடூரமான காட்டுமிராண்டித்தனமான செயலை ஃபிஃபா வேடிக்கை பார்க்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன'' என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? அடுத்து என்ன நடக்கும்?
விலங்குநல ஆர்வலர்கள் எதிர்ப்பு
மொராக்கோ நாய்களை கொல்வது தொடர்ந்தால், அந்த நாடு கால்பந்து போட்டியை நடத்த வேண்டுமா? என்பதை பிஃபா யோசிக்க வேண்டும் என்றும் ஜேன் குடால் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மொராக்கோவில் தெரு விலங்குகளைக் கொல்வதைத் தடைசெய்யும் சட்டம் உள்ளது. 2022 நீதிமன்றத் தீர்ப்பில் நாய்களைக் கொல்வதைத் திட்டமிட்டதற்காக ஒரு மாகாண ஆளுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் பிஃபா 2030 கால்பந்து உலகக்கோப்பையை மொராக்கோ நடத்தும் என்ற அறிவிப்பு வந்த பிறகு இந்த சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று விலங்குநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.உள்ளூர் போலீசார் கண்டும் காணாமல் இருப்பதால் அதிகாரிகள் நாய்கள் மீது கொடூர செயலை அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
குழந்தைகள் முன்னிலையில்...
மொராக்கோவில் ஆண்டுதோறும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் முன்னிலையில் 3,00,000 வரை தெருநாய்கள் கொல்லப்படுவதாக IAWPC கூறியுள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை தடுப்பூசி, கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் அடைப்பது என எத்தனையோ மனிதாபிமான அணுகுமுறைகள் உள்ளன.
மற்ற நாடுகள் தெருநாய்களைக் கட்டுப்படுத்த இந்த செயலை செய்து வருகின்றன. ஆனால் மொராக்கோ அதிகாரிகள் மிருகத்தனமாக நாய்களை கொன்று குவித்து வருகின்றனர் எனவும் விலங்குகள் நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மொராக்கோவின் நடவடிக்கைகளுக்கு எதிராக FIFA ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இன்டர்நெட் முடங்குகிறதா? பரபரப்பை பற்ற வைத்த கார்ட்டூன்! உண்மை என்ன?