ஜப்பானின் அரசியல் கட்சி, அதன் நிறுவனர் ராஜினாமா செய்த பிறகு, "AI பெங்குவின்" என்ற செயற்கை நுண்ணறிவு மாடலை புதிய தலைவராக நியமித்துள்ளது. இந்த AI, கட்சியின் நிர்வாக முடிவுகளை மட்டுமே எடுக்கும், கொள்கைகளை வகுக்காது.
ஜப்பானில் உள்ள "சாய்செய் நோ மிச்சி" (Saisei no Michi) அல்லது "மறுபிறப்புக்கான பாதை" (Path to Rebirth) என்ற பிராந்திய அரசியல் கட்சி, அதன் நிறுவனரே வெளியேறிய நிலையில், "AI பெங்குவின்" (AI Penguin) என்று அழைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மாடலை புதிய தலைவராக நியமித்துள்ளது. இது அரசியலில் ஒரு முன்னோடி முயற்சி என்று கருதப்படுகிறது.
ஜூலை மாதம் நடைபெற்ற நாட்டின் மேலவை தேர்தலில் இக்கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சியின் நிறுவனர் ஷின்ஜி இஷிமாரு ராஜினாமா செய்தார். இந்த தேர்தலில் இக்கட்சியின் 10 வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். மேலும், கடந்த ஜூன் மாதம் நடந்த டோக்கியோ சட்டமன்றத் தேர்தலிலும், போட்டியிட்ட 42 வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியிருந்தனர்.
24
ஷின்ஜி இஷிமாரு
மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறிய நகரத்தின் முன்னாள் மேயரான ஷின்ஜி இஷிமாரு, தனது ஆன்லைன் பிரச்சாரம் மூலம் 2024 டோக்கியோ கவர்னர் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட தேர்தல் தோல்விகளால் அவர் கட்சியில் இருந்து வெளியேறினார்.
அவர் வெளியேறிய பிறகு, AI ஆராய்ச்சி செய்து வரும் முனைவர் பட்ட மாணவரான கோகி ஒகுமுரா ஒரு செய்தியாளர் சந்திப்பில், "புதிய தலைவர் AI தான்" என்று அறிவித்தார். மேலும், AI பெங்குவினுக்கு உதவியாளராக தான் இருப்பேன் என்றும் அவர் கூறினார்.
34
AI தலைவர் செயல்படுவது எப்படி?
AI தலைவர் எவ்வாறு செயல்படும், எப்போது நடைமுறைக்கு வரும் போன்ற விவரங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும், அதன் பங்கு குறித்து பேசிய ஒகுமுரா, AI கட்சியின் உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை வழிநடத்தாது என்றும், ஆனால், கட்சியின் வளங்களை உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்குவது போன்ற நிர்வாக முடிவுகளை எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்தார். இஷிமாருவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்க சமீபத்தில் நடந்த ஒரு கட்சிப் போட்டியில் ஒகுமுரா வெற்றி பெற்றார்.
ஜப்பானின் "ஜப்பான் டைம்ஸ்" பத்திரிக்கையின்படி, ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த "மறுபிறப்புக்கான பாதை" கட்சிக்கு என எந்தவொரு கொள்கையும் இல்லை. மேலும், அதன் உறுப்பினர்கள் தங்களுக்கான சொந்த கொள்கைகளை வகுத்துக்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் இந்த அறிவிப்புக்கு முன்பே, கடந்த செப்டம்பர் 11 அன்று அல்பேனியா ஒரு AI ரோபோவை தனது முதல் முறையாக அமைச்சரவையில் நியமித்தது. "டியேல்லா" (Diella) என்ற பெயரிடப்பட்ட அந்த AI ரோபோ, அனைத்து பொது கொள்முதல்களையும் மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளது.
அல்பேனிய மொழியில் "சூரியன்" என்று பொருள்படும் டியேல்லா, அரசின் ஆவணங்களை மின்னணு முறையில் வெளியிடுவதன் மூலம் அரசு நிர்வாகத்தை எளிதாக்க வடிவமைக்கப்பட்டது. பாரம்பரிய அல்பேனிய உடையில் உள்ள இந்த டிஜிட்டல் உதவியாளர், குரல் கட்டளைகள் மூலம் பயனர்களுக்கு வழிகாட்டி, தாமதங்களைக் குறைக்கிறது.