அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப், ஹாரிஸ் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகும் 7 மாகாணங்கள்!

First Published | Nov 4, 2024, 11:22 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 5) நடக்கவுள்ளது. இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் 33 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாட்டை ஆளுப்போகிறார். இந்தத் தேர்தலில் ஒருசில மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள்.

கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்

50 மாகாணங்களில் 7 மாகாணங்களில் மட்டும் இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இடங்களில் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வெற்றியைத் தீர்மானிக்கும் ஏழு இடங்களில் முக்கியமானது அதிக மக்கள்தொகை கொண்ட பென்சில்வேனியா. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அல்லது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் இருவரில் யார் அடுத்த அமெரிக்க அதிபர் என்பதை முடிவுசெய்யும் சக்தி கொண்ட முக்கிய மாகாணம் இதுதான்.

வேட்பாளர்களின் உத்திகளிலும் இது பிரதிபலிக்கிறது. அவர்களின் விளம்பரச் செலவுகள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளில் பெரும்பாலானவை இந்த ஏழு மாகாணங்களில்தான் நடந்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் தனித்துவம்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் மற்ற மாகாண அளவிலான தேர்தல்களைப் போன்றது அல்ல. இந்தத் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு எட்டப்படாது. எலெக்டோரல் காலேஜ் எனப்படும் அமைப்பின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றிபெறும் வேட்பாளர், குறைந்தது 270 எலெக்டோரல் வாக்குகளைப் பெறவேண்டும். எலெக்டோரல் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 538.

பொதுமக்கள் செலுத்திய வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த 270 வாக்குகளைப் பெறுவது சாத்தியம்தான். டிரம்ப் 2016 இல் வென்றபோது இதுதான் நடந்தது. ஒருவேளை மொத்த எலெக்டோரல் வாக்குகள் 269-269 என சமநிலையை அடைந்தால், அமெரிக்க பிரதிநிதிகள் சபை வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளும் ஒரு வாக்கு செலுத்துவார்கள். இது முன்னாள் அதிபர் டிரம்புக்கு சாதகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

7 முக்கிய மாகாணங்களைத் தவிர மற்ற ஒவ்வொரு மாகாணமும் எதிர்பார்த்தபடி வாக்களித்தால், தற்போதைய துணை ஜனாதிபதி ஹாரிஸுக்கு 226, டிரம்பிற்கு 219 எலெக்டொரல் வாக்குகள் கிடைக்கும். மீதமுள்ள 93 வாக்குகளைப் பெறுவது யார் என்பதுதான் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும்.

Tap to resize

7 முக்கிய மாகாணங்கள்

ரஸ்ட் பெல்ட் பகுதியான மிச்சிகன் , பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் சன் பெல்ட் பகுதியான அரிசோனா, ஜார்ஜியா, நெவாடா மற்றும் வட கரோலினா ஆகியவைதான் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானம் செய்ய உள்ளன.

மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை ஒரு தலைமுறைக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் கோட்டையாக இருந்தன. ஆனால், 2016ஆம் ஆண்டில், டிரம்ப் இந்த மூன்றையும் மிகக் குறுகியதாக வித்தியாசத்தில் வென்றால். இது ஜனநாயகக் கட்சியின் அப்போதைய வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு வெற்றி வாய்ப்பைப் பலவீனப்படுத்தியது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிபரான ஜோ பிடன் மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியாவை மீட்டெடுத்தார். அதே நேரத்தில் தொடர்ந்து குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் ஜார்ஜியா மற்றும் அரிசோனாவில் ஆச்சரியமான வெற்றிகளைப் பெற்றார்.

கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?

நியூயார்க் டைம்ஸ் கருத்துக்கணிப்பின்படி, ஏழு முக்கிய மாகாணங்களும் தொடர்ந்து அனல்பறக்கும் போட்டிக்கான களமாக உள்ளன. டிரம்ப் அரிசோனாவில் 3 சதவீத புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். மற்ற ஆறு இடங்களிலும் சராசரியாக ஒரு புள்ளிக்கும் குறைவாகவே வித்தியாசம் உள்ளது.

இந்த முறை 2020 தேர்தலை விட நெருக்கமாக போட்டி காத்திருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. 2020ஆம் ஆண்டில் மூன்று மாகாணங்களில் டிரம்பிற்குச் சாதகமாக முடிவுகள் மாறி இருந்தால், அவர் மீண்டும் அதிபராவதற்கு போதுமானதாக இருந்திருக்கும். இந்த இடங்களில் வித்தியாசம் வெறும் 43 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது.

பென்சில்வேனியா

பென்சில்வேனியாவின் முக்கியத்துவம் என்ன? எளிமையான பதில் இங்கு 19 எலெக்டொரல் வாக்குகள் உள்ளன. இது இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனக் கருதப்படும் மற்ற ஆறு இடங்களில் உள்ளதை விட அதிகம்.

இதனால்தான் பென்சில்வேனியா, வெள்ளை மாளிகையில் யார் அமரப்போவது என்பதை முடிவு செய்யும் முக்கியமான சக்தியாகக் கருதப்படுகிறது. இதுதான் ஒரு வேட்பாளரை 269 எலெக்டொரல் வாக்குகளைத் தாண்டி கொண்டு செல்லும் பலம் கொண்டதாகவும் உள்ளது.

ஹாரிஸ் பென்சில்வேனியாவை இழந்தால், அவர் வட கரோலினா அல்லது ஜார்ஜியாவை வசப்படுத்த வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சிக்கு மூன்று முறை வாக்களித்த இந்த இரண்டு மாநிலங்கள் மீண்டும் சாதகமான முடிவைத் தர வாய்ப்பு உள்ளது.

டிரம்ப் பென்சில்வேனியாவை இழந்தால், அவர் விஸ்கான்சின் அல்லது மிச்சிகனில் வெற்றி பெற வேண்டும். இவை 1980 களில் இருந்து குடியரசுக் கட்சிக்கு ஒரு முறை மட்டுமே வெற்றியைக் கொடுத்துள்ளன. அதுவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு.

இரண்டு கட்சிகளும் பென்சில்வேனியாவை மிக முக்கியமான களமாக்க் கருதுகின்றன. ஹாரிஸ், டிரம்ப் இருவரும் மற்ற எந்த மாகாணங்களையும் விட இங்கு அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளனர். அக்டோபர் 7 வரை பென்சில்வேனியாவில் ஒளிபரப்பு விளம்பரங்களுக்காக 279.3 மில்லியன் டாலர் செலவழித்துள்ளனர். இது இரண்டாவது இடத்தில் உள்ள மிச்சிகனை விட 75 மில்லியன் டாலருக்கு மேல் அதிகமாகும்.

Latest Videos

click me!