சூப்பர் எல்-நினோ என்றால் என்ன?
பூமத்திய ரேகையை பகுதியில் மத்திய பசிபிக் பெருங்கடல் பெருங்கடல் பரப்பின் வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வு எல்-நினோ என்று அழைக்கப்படுகிறது. மத்திய பசிபிக் பெருங்கடலில் சராசரி வெப்ப நிலை 0.5 டிகிரி செல்சியஸ் ஆகும். இங்கு சராசரியைவிட அதிகமான வெப்பநிலை 5 மாதங்களுக்கு மேல் நீடித்தால் அது எல்-நினோ எனப்படுகிறது. இந்த வெப்பநிலை சராசரிக்கும் குறைவாக இருந்தால் ல-நினா எனப்படுகிறது.
வெப்பநிலை உயரும்
இந்த எல்-நினோ காலத்தின்போது வெப்பம் சராசரியை விட 0.8 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். இதுவே சூப்பர் எல்-நினோ காலத்தில் சராசரி வெப்பநிலைக் காட்டிலும் 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் கூட வெப்பநிலை அதிகரிக்கும்.
காலநிலை மாதிரிகளின் கணிப்புகள்
காலநிலை மாற்ற விளைவுகளை கவனித்து வரும் உலக காலநிலை மாதிரிகள் வரவிருக்கும் சூப்பர் எல்-நினோ பற்றி அச்சமூட்டும் தரவுகளைக் கூறுகின்றன. அவை மத்திய பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வு 1.6 டிகிரி முதல் 2.4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று கணிக்கின்றன. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எல்-நினோ காலகட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.
சூப்பர் எல்-நினோ எப்போது?
1982-83, 1997-98, 2015-16 ஆகிய ஆண்டுகளில் சூப்பர் எல்-நினோ காலகட்டம் இருந்துள்ளது. இதுவரை சுமார் 10-15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டு வந்துள்ள எல்-நினோ இப்போது முன்கூட்டியே ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகளின் கணிப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனால், கடைசியாக சூப்பர் எல்-நினோ ஏற்பட்ட ஆண்டு 2015-16 என்பதால் அதற்குள் மீண்டும் வர வாய்ப்பு இல்லை எனவும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்தியாவில் தாக்கம் எப்படி இருக்கும்?
இந்த ஆண்டு இந்தியப் பெருங்கடல் இருமுனை (ஐஓடி) நேர்மறையாக உள்ளதால் இந்தியாவில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் வறட்சி அதிகரிக்கும். இந்திய வானிலை ஆய்வு மையமும் இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவைக் காட்டிலும் 4 சதவீதம் மட்டுமே குறையும் என்று கூறியுள்ளது.