ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,400-ஐத் தாண்டியுள்ளது. 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400-ஐத் தாண்டியுள்ளதாக தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமை அன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பல மாகாணங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் மண் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட வீடுகள் நிலநடுக்கத்தின் அதிர்வைத் தாங்க முடியாமல் தரைமட்டமாயின. இதில் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெறுவது பெரும் சவாலாக உள்ளது.
24
உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்
ஐ.நா.வின் ஆப்கானிஸ்தான் ஒருங்கிணைப்பாளர் இந்திரிகா ரத்வட்டே கூறுகையில், "மீட்புப் பணிகள் என்பது ஒரு நேரத்துடனான போட்டி. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என்று எச்சரித்துள்ளார். அவர் சர்வதேச சமூகம் உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
2021-ம் ஆண்டு தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, சர்வதேச உதவிகள் குறைப்பு மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் திரும்ப அனுப்பப்படுவது போன்ற பல நெருக்கடிகளால் ஆப்கானிஸ்தான் தத்தளிக்கிறது.
34
மருத்துவமனைகள் மூடல்
உலக அளவில் பல நெருக்கடிகள் நிலவுவதாலும், நன்கொடை அளிக்கும் நாடுகள் நிதி உதவியைக் குறைத்துக்கொண்டதாலும் ஆப்கானிஸ்தானுக்கான உதவிகள் குறைவாகவே கிடைக்கின்றன.
ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைத் தலைவர் கேட் கேரி கூறுகையில், "நிதிப் பற்றாக்குறை காரணமாக 420-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மண்டலத்தில் மட்டும் 80 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீதமுள்ள மருத்துவமனைகள் அதிகப்படியான நோயாளிகளால் நிரம்பி வழிவதுடன், அத்தியாவசியப் பொருட்களும், பணியாளர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
தலிபான் அரசு பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிவதற்கு விதித்துள்ள தடை உள்ளிட்ட கொள்கைகள் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் நிதி உதவியைக் குறைத்துள்ளன.