பாகிஸ்தான் இராணுவம் பீரங்கி, போர் விமானங்கள், கனரக ஆயுதங்களுடன் நிலைகளைத் தாக்கி ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்தது. தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
காபூல், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. கத்தார், ஈரான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் இரு தரப்பினரையும் நிதானத்தைக் கடைப்பிடித்து இராஜதந்திர தீர்வை நோக்கிச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளன.
துராந்த் கோடு பகுதியில் வெடித்துள்ள மோதல், பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால, சிக்கலான எல்லைப் பிரச்சினையின் ஒரு பகுதி. துராந்த் கோடு பகுதியில் உள்ள பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் பல வரலாற்று, அரசியல் முக்கிய காரணங்களுக்காக எழுகின்றன. துராந்த் கோடு 1893-ல் பிரிட்டிஷ் இந்தியாவிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் உருவாக்கப்பட்டது.
இந்தக் கோடு ஆப்கான், பஷ்டூன் பழங்குடியினரை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது, சில பாகிஸ்தானிலும் சில ஆப்கானிஸ்தானிலும் இருந்தது. ஆப்கானிஸ்தான் இந்தக் கோட்டை ஒருபோதும் அதிகாரப்பூர்வ எல்லையாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, எல்லையில் அடிக்கடி இராணுவ, அரசியல் பதற்றம் நிலவுகிறது.