2025ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, மின்சுற்று தொடர்பான குவாண்டம் கண்டுபிடிப்புகளுக்காக ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்ட்டினிஸ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் எச். டெவோரெட் (Michel H. Devoret) மற்றும் ஜான் எம். மார்ட்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சுற்று தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக, ராயல் சுவீடிஷ் அகாடமி கூறியுள்ளது.
நோபல் பரிசுக் குழுவின் இயற்பியல் பிரிவு தலைவர் ஒல்லே எரிக்சன் இதுகுறித்து பேசுகையில், "நூறு ஆண்டுகள் பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் பயனுள்ளது. குவாண்டம் இயக்கவியல்தான் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படையாக உள்ளது," என்று தெரிவித்தார்.
23
அன்றாட பயன்பாட்டில் குவாண்டம் தொழில்நுட்பம்
கணினி மைக்ரோசிப்களில் உள்ள டிரான்சிஸ்டர்கள், நாம் பயன்படுத்திவரும் குவாண்டம் தொழில்நுட்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு, குவாண்டம் கிரிப்டோகிராபி, குவாண்டம் கணினிகள் மற்றும் குவாண்டம் சென்சார்கள் உள்ளிட்ட அடுத்த தலைமுறைக் குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு இயந்திர கற்றல் தொடர்பான கண்டுபிடிப்புகளாக இயற்பியல் துறை நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நோபல் பரிசு அறிவிப்புகள் அக்டோபர் 6 முதல் தொடங்கியுள்ளன. மருத்துவத்துறைக்கான பரிசு நேற்று மேரி இ. ப்ரூன்கோ, ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டி செல்கள் (regulatory T cells) பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
33
நாளை வேதியியலுக்கான நோபல் பரிசு
வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை (அக். 8) அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்.
நோபல் பரிசுகள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (இந்திய மதிப்பில் சுமார் 1.03 கோடி ரூபாய்) பரிசை உள்ளடக்கியது. டிசம்பர் 10ஆம் தேதி நடக்கும் விழாவில் இந்தப் பரிசு வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.
ஸ்வீடிஷ் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் என்பவரால் நோபல் பரிசு உருவாக்கப்பட்டது. அவர் தனது உயிலில், தனது சொத்துக்களை மனித குலத்திற்கு நன்மை செய்தவர்களுக்குப் பரிசு வழங்கப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.