
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்தடுத்து சுவாரஸ்யமான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. முத்து, மீனாவின் காதல் மற்றும் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, தற்போது பாட்டியின் நடவடிக்கைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. முத்துவும் மீனாவும் கீழே பேசிக் கொண்டிருந்தபோது அவர்களைப் பார்த்த பாட்டி ஏற்கனவே கோபமடைந்திருந்தார். இந்நிலையில், இருவரும் மொட்டைமாடியில் தனியாக இருக்கும் போது மீண்டும் பாட்டியின் கண்ணில் சிக்குகின்றனர். அதுவும் இருவரும் அருகருகே நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததால் பாட்டியின் கோபம் மேலும் அதிகமாகிறது.
Siragadikka Aasai : சத்யாவுக்கு எம்.டி பதவி... கிரிஷின் கேள்விகளால் மயங்கி விழுந்த மனோஜ்..!
இதனால் முத்துவின் காதைப் பிடித்து அவரை கீழே அழைத்து வரும் பாட்டி, வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து வைத்து புகார் கூறுகிறார். முத்துவும் மீனாவும் மொட்டைமாடியில் என்ன செய்தார்கள் என்று கேட்டு, இனிமேல் இப்படியெல்லாம் அவர்களை விட்டுவிடக்கூடாது என்றும் கடுமையாக கூறுகிறார். மேலும், மீனாவின் தோழியை அழைத்து இந்த விஷயத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். அதே நேரத்தில், முத்து-மீனா மட்டுமின்றி ரவியும் சுருதியும் காதலிப்பதை தான் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதாக பாட்டி கூறுகிறார். அவர்களுடைய விஷயத்தையும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில் மனோஜின் திருமணம் குறித்த பேச்சும் குடும்பத்தில் எழுகிறது. ஆனால் தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும், வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்றும் மனோஜ் கூறுகிறார். இதைக் கேட்ட பாட்டி, ஊரில் ஒரு பெண் இருப்பதாகவும், அந்தப் பெண்ணை மனோஜுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றும் யோசனை கூறுகிறார். உடனே மனோஜ் அந்தப் பெண் எப்படி இருப்பார் என்று தனது அம்மா விஜயாவிடம் விசாரிக்கிறார். ஆனால் விஜயா, பாட்டி கூறும் பெண்ணுக்கு தற்போது திருமணமாகி குழந்தைகள் கூட வளர்ந்திருக்கலாம் என்று கூறி மனோஜை கிண்டலாக திட்டுகிறார். இதனால் அந்த திருமணப் பேச்சு அங்கேயே வேறு விதமாக திரும்புகிறது.
இதற்கிடையே பாட்டியின் தற்போதைய மனநிலையைப் பார்த்த அண்ணாமலை ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். முத்து-மீனாவையும், ரவியையும் சுருதியையும் அழைத்து, அவர்களது பெற்றோரிடம் பேசி மீண்டும் திருமண ஏற்பாடுகளை செய்யலாம் என்று கூறுகிறார்.
முத்து-மீனாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தால், பாட்டிக்கு அவர்களுடைய பழைய நினைவுகள் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறதா என்ற எண்ணத்திலும் குடும்பத்தினர் இருக்கின்றனர். இதனால் அடுத்தடுத்த எபிசோடுகளில் திருமணம் தொடர்பான பேச்சுகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து முத்துவும் மீனாவும், இந்த விஷயங்களை அவரது அம்மாவிடம் தெரிவிப்பதற்காக மீனாவின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் எதிர்பாராத விதமாக சத்யாவை சந்திக்கின்றனர். சத்யா காரில் வந்து, கையில் நகைகளுடன் அங்கு ஆடம்பரமாக இருப்பதைப் பார்த்து முத்துவும் மீனாவும் கவனிக்கின்றனர். தனக்கு வேலை அதிகமாக இருப்பதால் அடிக்கடி வந்து செல்ல முடியாது என்றும், அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வேன் என்றும் சத்யா கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
சத்யா மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று முத்து நினைத்தாலும், சத்யா ரேகாவின் வீட்டில் இருப்பது மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சற்று சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சத்யாவின் வருகை மீனாவின் குடும்பத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? பாட்டியின் முடிவால் முத்து-மீனாவுக்கும், ரவி-சுருதிக்கும் உண்மையிலேயே திருமணம் நடக்குமா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.