
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்த சீரியலானது அப்பா, மகன் கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மெயின் கதாபாத்திரம் பாண்டியனின் குடும்பத்தில் உள்ளவர்கள் தான். அதில், பாண்டியன், கோமதி, சரவணன், தங்கமயில், செந்தில், மீனா, கதிர், ராஜீ மற்றும் அரசி ஆகியோர் தான் பாண்டியன் குடும்பம். இதே போன்று கோமதியின் அண்ணன்களான முத்துவேல், சக்திவேல் அவர்களது குடும்பமாக வடிவு, மாரி, குமரவேல் மற்றும் கோமதியின் அம்மா காந்திமதி ஆகியோர் எதிர்வீட்டில் இருக்கின்றனர். இதில் முத்துவேல் மற்றும் சக்திவேல் தான் ஆரம்பத்திலிருந்து வில்லன்களாக இருந்து வருகின்றனர்.
ஆரம்பம் முதலே சக்திவேல் மற்றும் சக்திவேல் ஆகியோரால் தான் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டது. ஆனால், எப்போது சரவணன் மற்றும் தங்கமயில் இருவருக்கும் திருமணமானதோ அப்போது முதல் புதிய திருப்பு முனையாக இருவரது வாழ்வில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது. இதற்கு காரணம் தங்கமயில் அவரது அம்மா பாக்கியம் மற்றும் மாணிக்கத்தின் பேச்சைக் கேட்டு அடிக்கடி பொய் சொன்னதோடு மட்டுமின்றி திருமண நிச்சயத்தின் போதிலிருந்து படிப்பு, தங்க நகைகள், வயது என்று எல்லாவற்றிலும் பொய் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அதை மறைக்க தேவைப்படும் போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக பொய்யை சொல்லி அடிக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சரவணனுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வரவே தங்கமயில் வீட்டை விட்டு விரட்டப்பட்டார். அப்போதுதான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி மீண்டும் வீட்டிற்குள் வந்தார். அதுவும் பொய் என்று சரவணனுக்கு தெரியவர இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. ஆனால், அப்போதும் கூட தங்கமயில் சரவணனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த சரவணன் எல்லா உணமைகளையும் வீட்டில் சொல்லவே பெரிய பூகம்பம் வெடித்தது. பாண்டியன் மற்றும் பாக்கியம் குடும்பத்திற்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப தங்கமயில் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்தனர். இதையடுத்து பாண்டியன் குடும்பத்தில் மீனாவை தவிர மற்றவர்கள் லாக்கப்பில் அடைக்கப்பட்டனர். இதில் ராஜீ மற்றும் அரசியை போலீசார் விடுவிக்கவே மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் முத்துவேல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாண்டியன் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தான் பாண்டியன் ஒரு முடிவு எடுத்தார். அதாவது இனிமேலும் தங்கமயில் குடும்பத்திற்கும் நமக்கும் எந்த உறவும், பந்தமும் இல்லை என்றார். இந்த காட்சிகளை எல்லாம் வைத்து ரசிகர்கள் சரவணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
ஆனால், இப்போது அதெல்லாம் நேர் எதிராக மாறிவிட்டது. எப்படி என்றால், தங்கமயிலுக்கு பிறந்த வீட்டு பாசமும் கிடைக்கவில்லை. புகுந்த வீட்டிலும் துரத்திவிட்டார்கள். வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் மீனா அவரை காப்பாற்றி கூட்டிக் கொண்டு வந்து வேலையும் வாங்கிக் கொடுத்தார். இந்த சூழலில் தான் தங்கமயில் கர்ப்பமானார். இது குறித்து மருத்துவரிடம் சென்று உறுதி செய்து கொண்டனர். இதைப் பற்றி சரவணனிடம் தெரியப்படுத்த அவரோ இந்த குழந்தைக்கு யார் அப்பா என்று கேட்டார். இந்த நிலையில் தான் மீனா மற்றும் தங்கமயில் இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து கொள்வது எப்படியோ செந்திலுக்கு தெரிய வந்துள்ளது. அதை உறுதிப்படுத்த ரகசியமாக சென்று கையும் களவுமாக பிடித்துவிட்டார்.
இதைப் பற்றி மீனாவிடம் கேட்க பெரிய வாக்குவாதம் ஆனது. மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்த செந்திலுக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. இது மீனாவிற்கு கொடுக்கப்பட்ட அரசு விடுதி என்பதால் மீனா செந்திலை வீட்டை விட்டு துரத்திவிட்டார். செந்தில் நேராக தனது வீட்டிற்கு வந்து மீனா மற்றும் தங்கமயில் இருவரும் பேசுவது பற்றி தெரியப்படுத்தினார். இதனால் கோபத்தில் கொந்தளித்த கோமதி உடனடியாக மீனாவை வீட்டிற்கு வரவழைக்க, அவரும் தங்கமயில் கர்ப்பமாக இருப்பது பற்றியும், சரவணன் அது யாருடைய குழந்தை என்று கேட்டது பற்றியும் எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தினார்.
மீனா சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு ஆடிப்போன பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் சரவணனை வரவழைத்து லெஃப்ட் ரைட்டு வாங்கினர். அப்போதுதான் சரவணனுக்கு தங்கமயில் கர்ப்பமாக இருப்பது உண்மை என்று தெரிய வந்தது. ஆரம்பத்தில் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்ட பாண்டியன் குடும்பத்தினர் தங்கமயிலுக்கு எதிராக இருந்தனர். ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கமயில் மீது இரக்கம் காட்ட தொடங்கிவிட்டனர்.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பது தெரிந்து பாண்டியன், தங்கமயிலை பார்த்து பேசிவிட்டு வரும்படி கோமதியிடம் கூறினார். ஆனால், அடுத்து என்ன செய்வது, மீண்டும் தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வருவதா? இல்லை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால், சரவணன் அது தன்னுடைய குழந்தை. குழந்தையை மட்டும் ஏற்றுக் கொள்வேன். தங்கமயிலை ஒரு போதும் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இப்படியான சூழலில் தங்கமயிலின் குடும்பத்தினரின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? தங்கமயிலை ஏற்றுக் கொள்ள சொல்வார்களா? இல்லையா என்பது பற்றி இனிவரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒளிபரப்பான கதை வேறு, இப்போது ஒளிபரப்பாகி வரும் கதை வேறும். தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் ஒரே ஒரு சீனால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் ஒட்டு மொத்த கதையும் காட்சியும் மாறிவிட்டது. இதற்கிடையில் சரவணன் வாழ்க்கையில் அஞ்சலி என்ற கதாபாத்திரம் குறுக்கிட்டது. இருவரும் ஏற்கனவே கல்லூரி காலத்தில் ஒன்றாக பேசி பழகியுள்ளனர். இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் பேச தொடங்கினர். பாண்டியன் கூட சரவணன் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தனக்கு சம்மதம் என்று கூறியிருந்தார். இப்போது பாண்டியன் தங்கமயில் மீது இரக்கம் காட்டும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.