Bigg Boss Common Man : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு முன்னர் நடத்தப்பட்டு வரும் காமன்மேன் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில், அதன் முதல் டாஸ்கே சர்ச்சையில் சிக்கி உள்ளது.
விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது பிக் பாஸ். இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 10-வது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியில் புதுமையான முயற்சியாக, பொதுமக்களுக்கும் போட்டியாளராகும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களைப் பற்றிய இரண்டு நிமிட வீடியோவை அனுப்பி ஆடிஷனில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தேர்வாகும் நபர்களில் தகுதியானவர்களை இறுதியாக தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்வு நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஓவியா, ராஜு மற்றும் ஆரி ஆகியோர் நடுவர்களாக இடம்பெற்றுள்ளனர். மாயா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
காமன்மேன் தேர்வு நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு டாஸ்க் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு அரங்கில் ஏராளமான போட்டியாளர்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்பாக பல பிளாஸ்டிக் சேர்கள் தலைகீழாக வைக்கப்பட்டிருக்கின்றன. பஸர் ஒலித்ததும், போட்டியாளர்கள் வேகமாக சேர்களை சரிசெய்து அதில் அமர வேண்டும் என்பதே டாஸ்க்.
பஸர் ஒலித்ததும் போட்டியாளர்கள் சேர்களை நோக்கி ஓடுகின்றனர். ஒரே சேரைப் பிடிக்க பலரும் போட்டி போடுவதால் அங்கு கடுமையான தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. சிலர் ஒருவரையொருவர் தள்ளியும், முட்டியும் கீழே விழுந்தும் சேரை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இந்தக் காட்சிகள்தான் தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 16, 2026
34
பிக் பாஸ் குழுவுக்கு எதிராக விமர்சனம்
இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக பொதுமக்களை இப்படியான உடல் ரீதியான போட்டியில் ஈடுபடுத்துவது தேவையா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க்குகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இன்னும் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்படாத சாதாரண மக்களையே ஒரே இடத்தில் திரட்டி இதுபோன்ற போட்டியில் ஈடுபடுத்துவது சரியா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
இந்தப் வீடியோ வெளியானதிலிருந்து, “பொழுதுபோக்குக்காக மனிதர்களை இப்படி நடத்தலாமா?”, “தேர்வு முறையே இவ்வளவு கடுமையாக இருக்க வேண்டுமா?” என பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு பிக் பாஸ் குழுவினர் தரப்பில் இருந்து ஏதேனும் விளக்கம் வெளியாகுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காமன்மேன் போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்த புதிய முயற்சி, பிக் பாஸ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.