
பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் 3-வது எபிசோடும் பல்வேறு சவால்கள், சுவாரஸ்யமான அறிமுகங்கள், எதிர்பாராத தருணங்கள் மற்றும் பரபரப்பான வாக்குவாதங்களுடன் தொடர்ந்தது. இந்த எபிசோடில் மேலும் சில போட்டியாளர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க முயன்ற நிலையில், இரண்டு பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர்.
இன்றைய எபிசோடில் முதலாவதாக வந்த ஃபெரோஸ் கான், தன்னை ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பணம் சம்பாதிப்பதும் தனது திறமைகளில் ஒன்று என்று கூறினார். தொழில்முனைவோர் மற்றும் பிசினஸ் அட்வைசர் என தன்னை குறிப்பிட்ட அவர், எலான் மஸ்க்கை தனது முன்மாதிரியாகக் கூறினார். ஆனால், அவர் குறிப்பிட்ட நபர் குறித்த போதிய புரிதல் அவருக்கு இருக்கிறதா என நடுவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், ஃபெரோஸின் அணுகுமுறை செயற்கையாக இருப்பதாக ஆரி தனது கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற பலூன் டேப் டாஸ்கை ஃபெரோஸ் வெற்றிகரமாக முடித்தார். இவரது முடிவை நிறுத்தி வைத்துள்ளனர்.
அடுத்ததாக இரண்டு குழந்தைகளின் ஒற்றைத் தாயான காமாட்சி வந்தார். இவர் கேப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு சிரமங்களைப் பற்றி மனம் திறந்து பேசிய அவர், தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்த பிக் பாஸ் போன்ற ஒரு தளம் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் பகிர்ந்து கொண்டார். அவரது தைரியமான அணுகுமுறையும், சுயமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பான்மையும் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது. இவரது முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது
பின்னர் சந்திரமதி மற்றும் வெங்கடேசன் என இருவர் உள்ளே வந்தனர். தந்தை இல்லாமல் வளர்ந்த தனது குழந்தைப் பருவத்தையும், சிறு வயதிலிருந்தே குடும்பத்திற்காக உழைத்ததையும் சந்திரமதி பகிர்ந்து கொண்டார். அவரது வாழ்க்கைப் பின்னணி உணர்வுபூர்வமானதாக அமைந்ததுடன், வெங்கடேசனுடனான உரையாடலும் கவனம் பெற்றது.
பெரிய கனவுகளுடனும் தெளிவான இலக்குகளுடனும் களமிறங்கிய வெங்கடேசன், தனது தொழில் மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றி பேசினார். பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். சந்திரமதியுடனான உரையாடலிலும் அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வெளிப்பட்டன. அவரது அணுகுமுறை நடுவர்களை கவர்ந்த நிலையில், அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். ஆனால் சந்திரமதியின் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து வந்த ஜார்ஜ் ராஜசெல்வன், 2004-ம் ஆண்டு முதல் கோயம்புத்தூரில் மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். காமெடி நடிகராக வேண்டும் என்ற தனது கனவுடன் பிக் பாஸ் வாய்ப்பை எதிர்பார்த்து வந்தார். தனது வாழ்க்கை அனுபவங்களையும் நகைச்சுவையையும் கலந்து நடுவர்களையே கலாய்க்கும் அளவுக்கு தனது காமெடி திறமையை வெளிப்படுத்தினார். ரன்னர் பேண்ட் டாஸ்க்கிலும் தனது திறமையை நிரூபித்த அவர், பொழுதுபோக்கு துறையில் தனக்கான இடத்தை உருவாக்க முடியும் என்பதை காட்டினார். இவரது முடிவும் நிறுத்திவைக்கப்பட்டது.
அடுத்ததாக அசோசியேட் டைரக்டராக பணியாற்றி வரும் ஜேசன், பாடல் வரிகள் மற்றும் இசை மீதான தனது ஆர்வத்தைப் பற்றி பேசினார். குடும்பத்திற்கான முக்கியத்துவம், தன்னம்பிக்கை மற்றும் தனது எதிர்கால கனவுகள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். மக்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டும் என்றும், நேர்மையுடன் செயல்பட்டு வெற்றியை அடைவது முக்கியம் என்றும் அவர் கூறினார். அவரது தன்னம்பிக்கையும் கருத்துகளும் நடுவர்களை கவர்ந்ததால், ஜேசன் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவரை நெக்ஸ்ட் லெவலுக்கு தேர்வு செய்தனர்.
பின்னர் வந்த அபிநயா, பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என தெரிவித்தார். கல்வி நிலையங்கள், பணியிடங்கள், பொது இடங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை என பல்வேறு சூழல்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர் தனது கருத்துகளை முன்வைத்தார்.
அப்போது அவருடன் வந்திருந்த மற்றொரு போட்டியாளரான ஐஸ்வர்யா, அபிநயாவின் சில கருத்துகளை கேள்விக்குள்ளாக்கினார். பாதுகாப்பு என்பது பெண்களுக்கு மட்டும் தொடர்புடைய விஷயமாக பார்க்கப்படாமல், ஒட்டுமொத்த மனிதர்களின் பாதுகாப்பாக அணுகப்பட வேண்டும் என்ற கோணத்தையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து அறையை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்களிலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது.
மக்களின் பாதுகாப்பு குறித்த தனது கருத்துகளை ஐஸ்வர்யா மிகவும் வெளிப்படையாக முன்வைத்தார். அபிநயாவின் அணுகுமுறையுடன் தனக்கு இருக்கும் முரண்பாடுகளையும் அவர் தயக்கமின்றி கூறினார். இருவரும் ஒருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்களை நேரடியாக சுட்டிக்காட்டியதால், விவாதம் படிப்படியாக தனிப்பட்ட விமர்சனங்களாக மாறியது. தேர்வு நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறிய பிறகும் இருவருக்கிடையேயான வாக்குவாதம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரையும் ஹோல்டில் வைத்துள்ளனர்.
மொத்தத்தில், பிக் பாஸ் காமன்மேன் டாப் 50 தேர்வின் 3-வது எபிசோடில் வெங்கடேசன் மற்றும் ஜேசன் கௌஷி ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல போட்டியாளர்கள் ஆன் ஹோல்டு பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில், அபிநயா மற்றும் ஐஸ்வர்யா இடையேயான கருத்து மோதல் எபிசோடின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தது.