
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ் தமிழ். போட்டியாளர்களின் விளையாட்டு, கருத்து மோதல்கள், நட்பு, காதல், சண்டை என ஒவ்வொரு சீசனும் தனக்கென ஒரு பரபரப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இதுவரை நடைபெற்ற சீசன்களில் பல்வேறு போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், இறுதியில் மக்கள் ஆதரவு அடிப்படையில் சிலர் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளனர். முதல் சீசனில் இருந்து 9வது சீசன் வரை பிக் பாஸ் தமிழ் டைட்டிலை வென்றவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழின் முதல் சீசனில் டைட்டிலை கைப்பற்றியவர் ஆரவ் நஃபீஸ். ஆரம்ப சீசனில் இருந்த போட்டியாளர்களில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவராகவும் இவர் இருந்தார்.
குறிப்பாக ஓவியாவுடன் ஆரவுக்கு இருந்த நெருக்கம் மற்றும் அவர்களுக்கிடையேயான சம்பவங்கள் இன்றளவும் பிக் பாஸ் ரசிகர்களால் பேசப்படும் விஷயமாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஆரவ், அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இரண்டாவது சீசனில் வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா. இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் டைட்டிலை வென்ற முதல் பெண் போட்டியாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் அறிமுகமான ரித்விகா, பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். பிக் பாஸ் வெற்றிக்குப் பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
மூன்றாவது சீசனின் வெற்றிக் கோப்பையை முகென் ராவ் கைப்பற்றினார். மலேசியாவைச் சேர்ந்த முகென், பாடகர் மற்றும் நடிகராகவும் ரசிகர்களிடம் பிரபலமானவர்.
பிக் பாஸ் வீட்டில் தனது தனித்துவமான அணுகுமுறையால் கவனம் பெற்ற அவர், இறுதியில் டைட்டிலை வென்று அசத்தினார். நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மட்டுமின்றி இசைத் துறையிலும் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
நான்காவது சீசனில் வெற்றியைப் பெற்றவர் நடிகர் ஆரி அர்ஜுனன். பிக் பாஸ் வீட்டில் தனது கருத்துகள் மற்றும் செயல்பாடுகளால் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்த போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.
நடிப்பு மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகப் பணிகள் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான செயல்பாடுகளிலும் ஆரி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றவர் நடிகரும் தொகுப்பாளருமான ராஜு ஜெயமோகன். நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான அணுகுமுறையால் ரசிகர்களை கவர்ந்தார்.
சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ள ராஜு, நடிப்பிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், பின்னர் பல்வேறு வாய்ப்புகளை பெற்றார்.
ஆறாவது சீசனின் வெற்றியாளர் சின்னத்திரை நடிகர் முகமது அசீம். பிக் பாஸ் வீட்டில் அவரது விளையாட்டு மற்றும் அணுகுமுறை குறித்து ஆதரவும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்தன.
சீரியல் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான முகமாக இருந்த அசீம், பகல் நிலவு, தெய்வம் தந்த வீடு, மாயா உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் டைட்டில் அவரது பிரபலத்தை மேலும் அதிகரித்தது.
ஏழாவது சீசனில் டைட்டிலை தட்டிச் சென்றவர் சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து டைட்டிலை வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
நிகழ்ச்சியில் தனது பேச்சு, அணுகுமுறை மற்றும் விளையாட்டு மூலம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானவர்.
பிக் பாஸ் தமிழ் 8வது சீசனின் டைட்டிலை முத்துக்குமரன் வென்றார். 2024ம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, முத்துக்குமரனின் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றது.
அவரைத் தொடர்ந்து வி.ஜே. விஷால் இரண்டாவது இடத்தையும், சவுந்தர்யா மூன்றாவது இடத்தையும், ரயான் நான்காவது இடத்தையும், பவித்ரா ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த திவ்யா கணேஷ், மக்கள் மனதை வென்றதோடு, அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் சபரி இரண்டாம் இடம் பிடித்தார். இதற்கு அடுத்தபடியாக விக்கல்ஸ் விக்ரம் மூன்றாம் இடத்தையும் அரோரா நான்காம் இடத்தையும் பிடித்தனர்.