மெட்டா நிறுவனம் பயனர்களிடம் பணம் வசூலிக்கத் தொடங்கியதற்குப் பின்னால் மிக முக்கியக் காரணம் உள்ளது. அதுதான் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) கனவு.
1. விண்ணை முட்டும் AI முதலீடுகள்: மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக AI தொழில்நுட்பப் போட்டியில் முன்னிலை பெற மெட்டா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக ‘ஸ்கேல் ஏஐ’ (Scale AI) நிறுவனத்தின் நிறுவனர் அலெக்சாண்டர் வாங்கை, சுமார் 14.3 பில்லியன் டாலர் மதிப்பில் மெட்டா தனது நிறுவனத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
2. பட்ஜெட் அதிகரிப்பு: 2026 ஆம் ஆண்டில் மட்டும் AI உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களை (Data Centres) மேம்படுத்துவதற்காக மெட்டா தனது மூலதனச் செலவை வரலாறு காணாத வகையில் 125 பில்லியன் முதல் 145 பில்லியன் டாலர் வரை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மெட்டா ஒரு பெரிய AI தரவு மையத்தையும் அமைத்து வருகிறது.
3. விளம்பர வருவாயை மட்டும் நம்பியிருக்க முடியாது: மெட்டா நிறுவனத்தின் மொத்த வருவாயில் 97.6% விளம்பரங்கள் மூலமே கிடைக்கிறது. ஆனால், புதிய AI தொழில்நுட்ப யுகத்தில் விளம்பர வருவாய் மட்டுமே இந்த பிரம்மாண்ட செலவுகளை ஈடுகட்ட போதாது என்பதால், பயனர்களிடமிருந்து நேரடியாக ஒரு நிலையான வருவாயைப் பெற மெட்டா திட்டமிட்டுள்ளது. இந்த சந்தா திட்டங்கள் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட மெட்டா இலக்கு நிர்ணயித்துள்ளது.