நாசா, நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வந்த 3I/அட்லஸ் என்ற நட்சத்திரங்களுக்கு இடையேயான பொருளின் மிகத் தெளிவான படங்களை வெளியிட்டுள்ளது. இது பல்வேறு விஷயங்களை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தில் அமைந்துள்ள நாசா, நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே வந்த மூன்றாவது நட்சத்திரங்களுக்கு இடையேயான பொருள் 3I/அட்லஸ் (Comet 3I/ATLAS) குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிகத் தெளிவான மற்றும் மிக நெருக்கமான படங்களை வெளியிட்டுள்ளது. ஹப்பிள், ஜேம்ஸ் வெப், செவ்வாய் கிரக செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட விண்கலங்களும் தொலைநோக்கிகளும் ஒன்றிணைந்து இந்தப் படங்களை எடுத்துள்ளனர். இந்த வால்மீன் நமது சூரிய மண்டலத்தை விட பல மடங்கு பழமையானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சிலியில் உள்ள ATLAS தொலைநோக்கி வழியாக ஜூலை மாத முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வால்மீன், அன்றிலிருந்து வானியலாளர்கள் தொடர்ச்சியான ஆராய்ச்சியில் உள்ளது.
3I/அட்லஸ் நட்சத்திரங்களுக்கு இடையேயான உலகத்திலிருந்து வந்த விருந்தினர் என்று வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். புதன்கிழமை நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த புதிய, உயர்தரப் படங்கள் வெளியிடப்பட்டன. இதன் பாதை மற்றும் தனித்துவமான இயக்கம் காரணமாக இது ஒரு வழக்கமான வால்மீனாக இல்லை. ஒரு வேற்றுக்கிரக தொழில்நுட்ப பொருள் கூட இருக்கலாம் என்ற தகவல்கள் முன்பு பரவின. இதனால் இந்த விண்வெளி பொருள் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்களிடம் மிகுந்த கவனம் ஈர்த்தது. ஆனால் இந்த எண்ணங்களை நாசா அதிகாரிகள் முற்றிலும் மறுத்தனர். சில அசாதாரண இரசாயன அம்சங்கள் இருந்தாலும், இது இயல்பான ஒரு வால்மீனைப் போலவே நடந்து கொள்கிறது என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.
22
நட்சத்திரங்களுக்கு இடையேயான பொருள்
எந்த தொழில்நுட்ப சிக்னல்களும் இதில் இல்லை என்ற நாசாவின் அறிவியல் திட்டம் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் தெளிவுபடுத்தினார். “இது ஒரு வால்மீன் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று அவர் கூறினார். 3I/அட்லஸ் பற்றி பரவியிருந்த அனைத்து ‘வேற்றுக்கிரகவாசி’ அச்சங்களுக்கும் இதனால் முடிவுபுள்ளி வைக்கப்பட்டது.
நாசாவின் இணை நிர்வாகி அமித் க்ஷத்ரியாவும் இதே கருத்தை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், "இது ஒரு வால்மீனாகவே உருவாகியுள்ளது மற்றும் ஒரு வால்மீனாகவே செயல்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டார். ஹப்பிள், ஜேம்ஸ் வெப், மார்ஸ் ஓர்பிட்டர்கள் உள்ளிட்ட ஒரு டசனுக்கும் மேற்பட்ட விண்வெளிக் கருவிகளைப் பயன்படுத்தி இந்த வால்மீனை நாசா விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்க அரசின் 43 நாள் ‘ஷட் டவுன்’ காரணமாக இந்தப் படங்கள் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் படங்கள், 3I/அட்லஸின் இயல்பைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானதாக நாசா கூறியுள்ளது.