பிரபல வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான இன்சோம்னியாக் கேம்ஸ் உருவாக்கி, சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டு உள்ள மார்வெல்ஸ் வோல்வரின் (Marvel's Wolverine) கேம், அறிமுகமான 50 நாட்களில் 24 லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அடுத்த தலைமுறை கேமிங் கன்சோலான 'பிளேஸ்டேஷன் 6' (PS6) தொடர்பான பணிகளை அடுத்த நிதியாண்டில் தீவிரப்படுத்த உள்ளதாகவும் சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
செப்டம்பரில் வெளியான இந்த சூப்பர் ஹீரோ ஆக்ஷன்-அட்வென்ச்சர் கேம், வெளியான தொடக்கத்திலேயே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் கடந்த பத்தாண்டுகளில் இன்சோம்னியாக் கேம்ஸ் நிறுவனத்தின் மிகக் குறைந்த மதிப்பீட்டைப் (lowest-rated) பெற்ற கேமாக இது அமைந்ததோடு, இதன் விற்பனை வேகமும் சற்றே மந்தமாகவே காணப்படுகிறது.
வியாழக்கிழமை நடந்த 2026-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு (Q2 FY 2026) நிதிநிலை முடிவுகள் குறித்த மாநாட்டில், 'மார்வெல்ஸ் வோல்வரின்' கேமின் விற்பனை விவரத்தை சோனி நிறுவனம் வெளியிட்டது. முந்தைய சாதனைகளுடன் ஒப்பிடுகையில், இன்சோம்னியாக் நிறுவனத்தின் முந்தைய வெளியீடான 'மார்வெல்ஸ் ஸ்பைடர் மேன் 2' வெளியான முதல் நாளிலேயே 25 லட்சம் பிரதிகள் விற்பனையாகி, பிளேஸ்டேஷன் வரலாற்றிலேயே மிக வேகமாக விற்பனையான கேம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஸ்பைடர் மேன் விளையாட்டைப் போல ஓபன் வேர்ல்டு அமைப்பாக இல்லாமல், 'மார்வெல்ஸ் வோல்வரின்' நேரடி கதைக்களத்தைக் கொண்ட சாகச விளையாட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வோல்வரின் மற்றும் அவரது பிற மியூட்டன்ட் சகாக்கள் இணைந்து உலகிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வது போன்று கதை நகர்கிறது.