ஜூலை மாத TRAI அறிக்கையின்படி, ஜியோ மற்றும் ஏர்டெல் லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. அதே நேரத்தில் வோடஃபோன்-ஐடியா மற்றும் BSNL பெரும் இழப்பை சந்தித்துள்ளன. முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, ஜூலை மாதத்திற்கான தொலைத்தொடர்பு பயனர்களின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, மொபைல் எண் மாற்றும் (Mobile Number Portability - MNP) பயனர்களின் எண்ணிக்கை எதிர்பாராதவிதமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் லட்சக்கணக்கான புதிய சந்தாதாரர்களைச் சேர்த்துள்ள நிலையில், வோடஃபோன்-ஐடியா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மேலும், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-இன் பயனர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த அறிக்கைபடி, இந்தியாவில் மொபைல் மற்றும் 5G FWA பயனர்களின் மொத்த எண்ணிக்கை 117 கோடியை எட்டியுள்ளது.
25
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆதிக்கம்!
புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களைப் பொறுத்தவரை, ஜியோ அதிகபட்சமாக 4,82,954 பயனர்களை தனது நெட்வொர்க்கில் சேர்த்துள்ளது. ஏர்டெல் நிறுவனமும் 4,64,437 புதிய பயனர்களுடன் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு மாறாக, வோடஃபோன்-ஐடியா 3,59,199 பயனர்களை இழந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. BSNL-இன் பயனர் எண்ணிக்கை 1,00,707 குறைந்துள்ளது.
35
சந்தை பங்கு நிலவரம்!
• ஜியோ: 41.04% சந்தை பங்குடன், 47.75 கோடி மொபைல் பயனர்களைக் கொண்டு இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது.
• ஏர்டெல்: 33.65% சந்தை பங்குடன், அதன் பயனர் எண்ணிக்கை 39.1 கோடியாக உயர்ந்துள்ளது.
• வோடஃபோன்-ஐடியா: இதன் சந்தை பங்கு 17.52% ஆக குறைந்து, 20.3 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது.
• BSNL: இதன் சந்தை பங்கு 7.77% ஆகக் குறைந்து, 9.3 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் புதிய தொலைத்தொடர்பு பயனர்களின் எண்ணிக்கை சில காலமாக மெதுவாக வளர்ந்து வந்தாலும், தங்களது எண்ணை மாற்றும் பயனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஜூலை மாத அறிக்கைபடி, 1.541 கோடி பயனர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தங்களது எண்ணை மாற்றியுள்ளனர். இது புதிய வாடிக்கையாளர்கள் சேருவதை விட, இருக்கும் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதையே அதிக அளவில் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
55
117 கோடி மொபைல் பயனர்கள்!
ஜூலை 31, 2025 வரை TRAI வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் மொபைல் பயனர்களின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் இருந்த 116.03 கோடியிலிருந்து 116.35 கோடியாக உயர்ந்துள்ளது. இது மாதந்தோறும் 0.04% வளர்ச்சியை குறிக்கிறது. மொபைல் மற்றும் 5G FWA உட்பட மொத்த வயர்லெஸ் பயனர்களின் எண்ணிக்கை 117.08 கோடியிலிருந்து 117.19 கோடியாக உயர்ந்துள்ளது, இது 0.09% மொத்த வளர்ச்சியை காட்டுகிறது. மேலும், 5G FWA பயனர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் ஜியோ 64 லட்சம் பயனர்களையும், ஏர்டெல் 19 லட்சம் பயனர்களையும் கொண்டுள்ளது.