கூகுள் இப்போது ஒவ்வொரு கூகுள் கணக்கிலும் 15ஜிபி கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக வழங்குகிறது. இதில் Gmail, Photos, Docs, Sheets, Drive மற்றும் உட்பட அனைத்து Google சேவைகளும் அடங்கும்.
15ஜிபி ஸ்டோரேஜ் பல சேவைகளில் பகிரப்பட்டிருப்பதால், விரைவில் தீர்ந்துவிடும். கூகிள் ஒன் மூலம் கூடுதல் கிளவுட் ஸ்டோரேஜை வாங்குவது ஒரு தீர்வு. ஆனால், அதற்குப் பதிலாக கூகுள் டிரைவில் உள்ள வேண்டாத ஃபைல்களில் நீக்குவதன் மூலம் கணிசமான மெமரி ஸ்பேஸைப் பெறமுடியும்.
முதலாவதாக, எந்த கூகுள் சேவை அதிக ஸ்டோரேஜை பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இதைப் புரிந்துகொள்ள, Google டிரைவ் இணையதளத்திற்குச் சென்று, ஸ்டோரேஜ் பகுதிக்குச் செல்லவும். அதில் எந்தெந்த சேவைக்கு எவ்வளவு ஸ்டோரேஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியும். அதற்கேற்கு ஏற்ப அதிகமான மெமரியை எடுத்துக்கொள்ளும் சேவை கட்டுப்படுத்த வேண்டும்.
கூகுள் டிரைவில் எந்த ஃபைலை அழித்தாலும், அது டிராஷ் பகுதிக்குச் சென்றுவிடும். 30 நாட்களுக்குப் பின் அந்த ஃபைல்கள் டிராஷில் இருந்து தானாகவே அழிந்துவிடும். டிராஷ் பகுதியில் அதிக ஃபைல்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளலாம். அவ்வப்போது டிராஷ் ஃபைல்களை 30 நாட்களுக்கு முன்பு நாமே நீக்கலாம்.
ஜிமெயிலில் பெரிய ஃபைல்களுடன் வரும் ஈமெயில்களைக் கண்டறிந்து அவற்றை நீக்கலாம். ஜிமெயிலில் has:attachment என்று குறிப்பிட்டுத் தேடினால், கோப்புகள் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும் பட்டியலிடப்படும். அவற்றில் பெரிய அளவு கொண்ட ஃபைல் இருக்கும் மெயில்களை அழிப்பதன் மூலம் கணிசமான ஸ்டோரேஜை பெறலாம்.
கூகுள் மீட்டிங் மூலம் நடக்கும் இணையவழி சந்திப்புகளில் பங்கேற்றிருந்தால், அவை ரெக்கார்டு செய்யப்பட்டிருக்கலாம். தேவையில்லாத கூகுள் மீட்டிங் ரெக்கார்டுகளை நீக்கிவிடலாம்.
கேமரா எடுக்கும் போட்டோ, வீடியோ அனைத்தையும் பேக்அப் எடுக்கும் வகையில் Google Photos வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டும் பேக்அப் எடுக்கும் வகையில் சில ஃபோல்டர்களை மட்டும் பேக்அப் செய்ய தேர்வு செய்யலாம். முடிந்தால் வீடியோக்களை பேக்அப் எடுப்பதைத் தவிர்க்கலாம். ஹெச்டி தரத்தில் பேக்அப் எடுக்காமல் சுமாரான உயர் தரத்தில் பேக்அப் எடுக்கும் வாய்ப்பை தேர்வு செய்யலாம்.
பெரிய கோப்புகள் இருந்தால், அவை குறிப்பிடத்தக்க இடத்தை எடுத்துக் கொள்கின்றன. அவற்றை ZIP அல்லது RAR வடிவில் மாற்றி சுருக்கப்பட்ட கோப்புகளாக அனுப்பலாம்.
கூகுள் ஸ்டோரேஜ் மேனேஜர் மூலம் தேவை இல்லாத கோப்புகளை கூகுள் டிரைவில் இருந்து நீக்கலாம். அதற்கு https://one.google.com/u/1/storage என்ற தளத்திற்குச் சென்று கூகுள் ஸ்டோரேஜ் மேனேஜரை பயன்படுத்தலாம்.
கூகுள் டிரைவ் ஸ்டோரேஜை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தால், அவர்கள் அதிக ஸ்டோரேஜை பயன்படுத்துகிறார்களா எனச் சரிபார்க்கவும். அப்படியானால், அவர்கள் பயன்படுத்தாத சில கோப்புகளை அழிக்கும்படி அவர்களிடம் கூறுங்கள்.