Google உங்கள் ஜிமெயில் தகவல்களை கூகுள் திருடுகிறதா? AI பயிற்சிக்கு பயன்படுத்துவதாக வந்த வதந்திக்கு கூகுள் மறுப்பு. பிரைவசி செட்டிங்ஸ் பற்றிய உண்மை இதோ.
Google ஜிமெயில் பயனர்களே உஷார்? கூகுள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ பதில்!
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதாவது, கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் ஜிமெயில் (Gmail) தகவல்களை ரகசியமாகத் திருடி, தனது செயற்கை நுண்ணறிவு மாடலான 'ஜெமினி'க்கு (Gemini AI) பயிற்சி அளிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவல்களை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
27
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள்
சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில், பயனர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் இணைப்புகளை (Attachments) கூகுள் தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்துவதாகவும், இதற்காக தனது பிரைவசி பாலிசியை ரகசியமாக மாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்துள்ள கூகுள் செய்தித் தொடர்பாளர் ஜென்னி தாம்சன், "இந்த அறிக்கைகள் தவறானவை. நாங்கள் யாருடைய செட்டிங்ஸையும் மாற்றவில்லை. உங்கள் ஜிமெயில் உள்ளடக்கத்தை ஜெமினி AI பயிற்சிக்கு நாங்கள் பயன்படுத்துவதில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
37
ஸ்மார்ட் அம்சங்கள் (Smart Features) என்றால் என்ன?
ஜிமெயிலில் உள்ள 'Smart Features' என்ற ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்குமாறு பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில், இந்த அம்சங்கள் பல ஆண்டுகளாகவே உள்ளன. இவை எழுத்துப்பிழை திருத்தம் (Spell Check), மின்னஞ்சல் சுருக்கம் (Summaries), தானியங்கி பதில் (Auto-reply) மற்றும் காலண்டர் அப்டேட்கள் போன்ற வசதிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, AI பயிற்சிக்கு அல்ல என்று கூகுள் கூறியுள்ளது.
இந்த வதந்தி பரவ முக்கிய காரணம், கடந்த ஜனவரி மாதம் கூகுள் வெளியிட்ட ஒரு அப்டேட் ஆகும். அதில் பயனர்கள் 'Smart Features' வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்யும் வசதி வழங்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிலருக்கு அவர்கள் ஆஃப் செய்து வைத்திருந்த செட்டிங்ஸ் மீண்டும் தானாகவே ஆன் ஆகிவிட்டது. இதுவே பயனர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
57
தனிப்பயனாக்கம் vs AI பயிற்சி
கூகுள் ஒர்க்ஸ்பேஸ் (Workspace) செயலிகளில், "உங்கள் அனுபவத்தை மேம்படுத்த உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இது கேட்பதற்கு பயமாக இருந்தாலும், கூகுள் சொல்வது என்னவென்றால், உங்கள் விமான டிக்கெட் விவரங்களை காலண்டரில் சேர்ப்பது, பார்சல் டிராக்கிங் செய்வது போன்ற தனிப்பட்ட உதவிகளுக்காக மட்டுமே இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஜெமினி AI-க்கு பாடம் கற்பிக்கப் பயன்படாது.
67
ஜெமினி 3 மாடலின் வருகை
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, கூகுள் தனது மிகவும் சக்திவாய்ந்த 'ஜெமினி 3' (Gemini 3) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மனிதர்களைப் போலவே சிந்திக்கும் திறன் கொண்டது என்றும், ஆழமான விஷயங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டது என்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
77
அச்சப்படத் தேவையில்லை
ஆகவே, பயனர்கள் வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை என்றும், ஜிமெயில் தரவுகள் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.