ChatGPT-யில் 'Share' வசதியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் கூகுள் தேடலில் பட்டியலிடப்பட்டன. இது ஒரு குறுகிய கால சோதனை முயற்சி மட்டுமே என்று OpenAI விளக்கமளித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தளமான ChatGPT-யில் பயனர்கள் நடத்திய தனிப்பட்ட உரையாடல்கள், கூகுள் தேடலில் பட்டியலிடப்பட்டதால், அதன் பயனர்கள் மத்தியில் தனியுரிமை குறித்த அச்சம் எழுந்துள்ளது. ChatGPT-யின் ‘Share’ (பகிர்வு) வசதியில் ஏற்பட்ட ஒரு குறைபாடு காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பயனர்கள் தங்கள் உரையாடல்களைப் பகிர, பொது இணைப்புகளை உருவாக்கும் வசதி ChatGPT-யில் உள்ளது. இந்த வசதி மூலம் தாங்களாகவே உரையாடல்களைப் பகிர்ந்த பயனர்கள் மட்டுமே இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டனர்.
25
OpenAI-ன் விளக்கம்
ஆனால், இவ்வாறு உருவாக்கப்பட்ட பொது இணைப்புகளை கூகுள், பிங் போன்ற தேடுபொறிகள் கண்டறிந்து பட்டியலிட முடியும் என்பது பல பயனர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. இதன் விளைவாக, தனிப்பட்ட உறவுச் சிக்கல்கள் முதல் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் வரை பல தனிப்பட்ட விஷயங்கள் அடங்கிய உரையாடல்கள் இணையத்தில் தேடும் எவரும் அணுகக்கூடியதாக இருந்தது.
டெக்க்ரஞ்ச் (TechCrunch) செய்தி அறிக்கை மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து OpenAI நிறுவனம் உடனடியாக விளக்கம் அளித்தது. தேடுபொறிகள் மூலம் பயனுள்ள உரையாடல்களைக் கண்டறிய உதவுவதற்காக இது ஒரு குறுகிய கால சோதனை முயற்சி மட்டுமே என்று அந்நிறுவனம் உறுதி செய்தது.
35
சோதனை முயற்சி மட்டுமே
இது தொடர்பாக OpenAI வெளியிட்ட அறிக்கையில், “கூகுள் போன்ற தேடுபொறிகள் மூலம் பயனர்கள் தங்கள் உரையாடல்களைக் கண்டறிய அனுமதிக்கும் வசதியை ChatGPT-யில் இருந்து நீக்கிவிட்டோம். இது பயனுள்ள உரையாடல்களைக் கண்டறிய உதவும் ஒரு குறுகிய கால சோதனை முயற்சி மட்டுமே. இந்த வசதியைப் பயன்படுத்த, பயனர்கள் ஒரு உரையாடலைப் பகிரத் தேர்ந்தெடுத்து, பின்னர் தேடுபொறிகளுடன் பகிரப்படுவதற்கான ஒரு பெட்டியை டிக் செய்ய வேண்டும்." எனக் கூறியுள்ளது.
"இருப்பினும், இந்த அம்சம் பயனர்கள் தற்செயலாகத் தாங்கள் பகிர விரும்பாத விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது என நாங்கள் கருதுவதால், இந்த விருப்பத்தை நீக்குகிறோம். ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள உள்ளடக்கத்தையும் சம்பந்தப்பட்ட தேடுபொறிகளிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதுகாப்பு மற்றும் தனியுரிமை எங்களுக்கு மிகவும் முக்கியமானவை" என்றும் OpenAI நிறுவனம் தெரிவித்தது.
55
தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம்
பயனர்களின் தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், எதிர்காலத்திலும் தங்கள் தயாரிப்புகளில் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் OpenAI நிறுவனம் கூறியுள்ளது.