போலி ஆதார், பான் கார்டுகளை நொடியில் உருவாக்கும் ChatGPT!
சாட்ஜிபிடி போலி ஆவணங்களை உருவாக்கும் திறன் பயனர்களிடையே தனியுரிமை மீறல் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இது சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
சாட்ஜிபிடி போலி ஆவணங்களை உருவாக்கும் திறன் பயனர்களிடையே தனியுரிமை மீறல் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இது சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ChatGPT தனியுரிமை மீறல்:
OpenAI நிறுவனத்தின் AI கண்டுபிடிப்பான சாட்ஜிபிடி (ChatGPT) வெளியான நாளில் இருந்தே பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பான கவலைகளை எழுப்பியது. மிகவும் உண்மையானது போல துல்லியமான போலி படங்களை உருவாக்கும் AI சாட்பாட்டின் திறன் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்போது, இப்போது அடுத்த கட்ட அபாயத்தைக் கிளப்பி இருக்கிறது.
போலியான ஆவணங்கள்:
சாட்ஜிபிடியால் போலியான ஆவணங்களை எளிதாக உருவாக்க முடிகிறது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் போல போலி ஆவணங்களை GPT-4 சுலபமாகத் தயாரித்துவிடுகிறது. சமீபத்தில் பல பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி போலி ஆவணங்களை எளிதாக உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். சிலர் அத்தகைய போலி ஆவணங்கள் சிலவற்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி எச்சரித்துள்ளனர்.
போலி ஆதார் மற்றும் பான் கார்டு:
"ChatGPT போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளை உடனடியாக உருவாக்குகிறது. இது ஒரு கடுமையான பாதுகாப்பு ஆபத்து. AI தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட அளவிற்காகவது கட்டுப்படுத்த வேண்டும்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
டேட்டா பிரைவசி (Data Privacy):
"நான் AI-யிடம் ஒரு பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரியுடன் ஒரு ஆதார் அட்டையை உருவாக்கச் சொன்னேன்... அது கிட்டத்தட்ட சரியான பிரதியை உருவாக்கிவிட்டது. இப்போது யார் வேண்டுமானாலும் ஆதார் மற்றும் பான் அட்டையின் போலி பிரதியை உருவாக்கலாம். டேட்டா பிரைவசி பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் AI நிறுவனங்களுக்கு இதுபோன்ற போலிகளை உருவாக்க தரவுகளை விற்பது யார்? இல்லையென்றால் எப்படி இவ்வளவு துல்லியமான வடிவமைப்புடன் உருவாக்க முடியும்?" என மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலி ஆவணங்களில் பிரபலங்களின் படங்கள்:
சாட்ஜிபிடி உண்மையான தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கவில்லை என்றாலும், பிரபலமான நபர்களுக்கு அவர்கள் படத்துடன் போலி ஐடிகளை உருவாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த தொழில்நுட்பங்களால் ஏற்படும் சாத்தியமான அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது.
சைபர் குற்றங்கள்:
AI தொழில்நுட்பத்தின் இந்தத் திறன் சைபர் குற்றங்கள் குறித்த கவலையை அதிகரிக்கச் செய்கிறது. ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடும் கும்பல் இதுபோன்ற போலி ஆவணங்களை பயன்படுத்தி குற்றங்கள் புரிய வாய்ப்பு உள்ளது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.