அண்டார்டிகாவில் அமைந்துள்ள 'த்வைட்ஸ் பனிப்பாறை' முன்பு கணிக்கப்பட்டதை விட 2 மடங்கு வேகத்தில் உருகி கடல் மட்டத்தை உயர்த்தக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகளின் புதிய கணினி மாதிரி ஆய்வு எச்சரிக்கிறது.
கூடுதல் புவி வெப்பமயமாதல் ஏற்படாவிட்டாலும் கூட, அண்டார்டிகாவின் 'த்வைட்ஸ் பனிப்பாறை' எனப்படும் "உலக அழிவு பனிப்பாறை" (Doomsday Glacier), முன்பு கணிக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு வேகத்தில் உருகக்கூடும் என்று ஒரு திடுக்கிடும் புதிய கணினி மாதிரி (Computer Model) ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
வெப்பமான பெருங்கடல் நீர் பனிப்பாறையின் அடிப்பகுதியில் பல மைல்கள் ஆழத்திற்கு ஊடுருவி, அதன் அடித்தளத்தைப் பலவீனப்படுத்தி, பனிப்பாறை கரையும் வேகத்தை அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். புதிய கணிப்பின்படி, இந்த பனிப்பாறை மட்டும் 2100-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய கடல் மட்டத்தை 30 மில்லிமீட்டர் வரை உயர்த்தக்கூடும் என்றும், பனிப்பாறையைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு முக்கிய நீருக்கடியில் உள்ள பாறை முகடை இழக்க 60% வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
24
பனியை அடியிலிருந்து உருக்கும் கதகதப்பான கடல் நீர்
இவ்வளவு காலம் பனிப்பாறை நிபுணர்கள், பனி நிலப்பரப்பை விட்டு விலகி நீரில் மிதக்கத் தொடங்கும் ஒரு குறுகிய எல்லைக் கோட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணிப்புகளைச் செய்து வந்தனர், என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், கலிபோர்னியா பல்கலை. (UC Irvine) புவி அமைப்பு அறிவியல் மேனாள் ஆய்வாளருமான மேட்டியா பொய்னெல்லி தெரிவித்துள்ளார்.
ஆனால், செயற்கைக்கோள் அவதானிப்புகள் மூலம் நாங்கள் ஒரு புதிய உண்மையைக் கண்டறிந்துள்ளோம். பனிப்பாறைகளுக்குக் கீழே கி.மீ கணக்கில் பரந்து விரிந்த 'கிரவுண்டிங் ஜோன்' உள்ளது. இங்கு கதகதப்பான கடல் நீர் பனிப்பாறைகளின் ஆழமான பகுதிக்கு ஊடுருவி, அடியிலிருந்து தீவிரமாக பனியை உருக்கி வருகிறது," என்று அவர் விளக்கியுள்ளார்.
மேற்கு அண்டார்டிகாவின் அமுண்ட்சன் கடல் பகுதியில் அமைந்துள்ள த்வைட்ஸ் பனிப்பாறை, அண்டார்டிகாவின் ஒட்டுமொத்த பனி இழப்பில் 3-ல் 1 பங்கிற்கு காரணமாகும். கடந்த சில தசாப்தங்களாக இந்த பனிப்பாறை மெலிந்து, அதிவேகமாகப் பின்வாங்கி வருகிறது. வழக்கமான கணினி மாதிரிகளால் செயற்கைக்கோள்கள் பதிவு செய்த இந்த அதிவேகப் பின்வாங்கலைக் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் இருந்தது.
34
நிலைநிறுத்தும் பாறை முகடை இழக்கும் அபாயம்
பனி உருகுவதுடன் மட்டும் இந்த ஆபத்து முடிந்துவிடவில்லை. பனிப்பாறைக்கு அடியில் நீரின் நகர்வு அதிகரித்து வருவதால், பனிப்பாறையை நகராமல் பிடித்து வைத்துள்ள நீருக்கடியில் உள்ள பாறை முகடுகளுடனான தொடர்பு பலவீனமடைந்து வருகிறது. இந்த இயற்கை ஆதாரங்கள் தளர்வதால், பனிப்பாறை இன்னும் வேகமாக நகரத் தொடங்கும்.
த்வைட்ஸ் பனிப்பாறையின் முக்கியப் பகுதி தற்போது 'முஜினோட் ரிட்ஜ்' (Mouginot Ridge) என்ற பாறை முகடால் தற்காலிகமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த முகடின் பிடி தளர்ந்துவிட்டால், பனிப்பாறை தொடர்ந்து நிலப்பரப்பை நோக்கிப் பின்வாங்கும்," என்று பொய்னெல்லி கூறுகிறார். இவர்களின் புதிய கணினி மாதிரியின்படி, 2100-ஆம் ஆண்டிற்குள் த்வைட்ஸ் பனிப்பாறை, முஜினோட் பாறை முகடிலிருந்து முழுமையாக விலகுவதற்கு 60% சாத்தியக்கூறு உள்ளது.
இந்த புதிய கணிப்புகள், வருங்காலத்தில் த்வைட்ஸ் பனிப்பாறையால் ஏற்படக்கூடிய கடல் மட்ட உயர்வை இதுவரை நாம் குறைவாகவே மதிப்பிட்டுள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த பல தசாப்தங்களாகப் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை நாம் ஆவணப்படுத்தி வருகிறோம். ஆனால் த்வைட்ஸ் போன்ற பனிப்பாறைகளின் அடிப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை உணரும்போது ஆபத்தின் வீரியம் அதிகமாகிறது, என்று ஆய்வின் இணை ஆசிரியரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான எரிக் ரிக்னாட் தெரிவித்துள்ளார்.
இதுவரை இருந்த பெரும்பாலான கணிப்புகள் பனி இழப்பின் அதிவேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறின. ஆனால், முழுமையான இயற்பியல் காரணிகளை உள்ளடக்கிய எங்கள் புதிய மாதிரி, பழைய பதிவுகளோடு சரியாகப் பொருந்துவதுடன், முன்பு கணிக்கப்பட்டதை விட 2 மடங்கு அதிகமான பாதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது வரும் தசாப்தங்களில் கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பெரும் ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை பல மடங்கு உயர்த்துகிறது, என அவர் எச்சரித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.