Amazon data centres
அமேசான் இந்தியா நிறுவனம் மும்பைக்கு அருகிலுள்ள பலாவாவில் பிரமாண்டமான தரவு மையத்தை (Data Centre) உருவாக்க, ரியல் எஸ்டேட் டெவலப்பர் லோதா குழுமத்திடம் இருந்து ரூ.450 கோடிக்கு 38.18 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமேசான் இந்தியாவின் துணை நிறுவனமான அமேசான் டேட்டா சர்வீசஸ் இந்தியா, கிட்டத்தட்ட 4.16 மில்லியன் சதுர அடியில் புதிய டேட்டா சென்டரை அமைக்க உள்ளது.
இதன் எதிரொலியாக மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் லிமிடெட் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தக அமர்வில் 0.56 சதவீதம் உயர்ந்தது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் ₹ 1,289.60 ஆக இருந்த இந்நிறுவனதிதன் பங்கு மதிப்பு ரூ.1,296.80 ஆக அதிகரித்தது.
அமேசான் டேட்டா சர்வீசஸ் இந்தியா, விற்பனை ஒப்பந்தப் பதிவின்போது மேக்ரோடெக் டெவலப்பர்களுக்கு மொத்தத் தொகையில் ரூ.396 கோடிக்கு மேல் செலுத்திவிட்டது என்று கூறப்படுகிறது. எஞ்சியுள்ள சுமார் 54 கோடி ஒருசில நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தப்படும் என எகனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
நவம்பர் 12ஆம் தேதி நடந்த இந்த ஒப்பந்தத்தின் பதிவுக்காக நிறுவனத்தின் சார்பில் ரூ.27 கோடி முத்திரைக் கட்டணம் செலுத்தியுள்ளது என்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான பிராப்ஸ்டாக் (Propstack) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.