AI தடையை மீறி ஆப்பிள், கூகுள் தளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் AI செயலிகள்! பாதுகாப்புக் குறைபாட்டை அம்பலப்படுத்திய புதிய அறிக்கை. முழு விவரம் உள்ளே.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் (Apple) மற்றும் கூகுள் (Google) மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளன. பெண்களின் புகைப்படங்களில் இருக்கும் ஆடைகளை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நீக்கி, அவர்களை ஆபாசமாக சித்தரிக்கும் செயலிகள் இன்னும் இந்தத் தளங்களில் புழக்கத்தில் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. கடுமையான விதிகள் மற்றும் தடைகள் இருப்பதாக இந்த நிறுவனங்கள் கூறினாலும், உண்மையில் டஜன் கணக்கான இத்தகைய செயலிகள் இன்றும் எளிதாகக் கிடைக்கின்றன என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26
டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட் அறிக்கை
தொழில்நுட்ப நிறுவனங்களைக் கண்காணிக்கும் லாப நோக்கற்ற அமைப்பான 'டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட்' (Tech Transparency Project) இந்தத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. "Nudify" அல்லது "Undress" போன்ற வார்த்தைகளைத் தேடினாலே இந்தச் செயலிகள் வரிசைகட்டி நிற்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
36
எண்ணிக்கை சொல்லும் உண்மை
இந்த ஆய்வின்படி, கூகுள் பிளே ஸ்டோரில் 55 செயலிகளும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 47 செயலிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெண்களின் புகைப்படங்களில் உள்ள ஆடைகளை நீக்கி நிர்வாணமாகவோ அல்லது அரைகுறை ஆடையுடனோ மாற்றும் திறன் கொண்டவை. சில செயலிகள் நேரடியாக நிர்வாணப் படங்களை உருவாக்கினால், மற்றவை பிகினி போன்ற ஆடைகளை அணிவிப்பது போல் மாற்றுகின்றன.
இந்தச் செயலிகள் ஏதோ ஒரு மூலையில் மறைந்திருக்கவில்லை; மாறாக, இவை உலகம் முழுவதும் 705 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 117 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செயலிகள் மூலம் வரும் வருவாயில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களும் பங்கு பெறுவது, அவர்கள் வகுத்த விதிகளுக்கே முரணாக அமைந்துள்ளது என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
56
சிறார்களுக்கு ஆபத்து
மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இவற்றில் பல செயலிகள் "அனைத்து வயதினருக்கும் ஏற்றது" (Suitable for all ages) அல்லது 9 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. பயனர் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி, ஒரு பட்டனைத் தட்டினாலே போதும், எவ்வித எச்சரிக்கையோ அல்லது வயது வரம்போ இல்லாமல் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுகின்றன. இது சிறார்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
66
நிறுவனங்களின் விளக்கம்
இந்த அறிக்கை வெளியான பிறகு, ஆப்பிள் நிறுவனம் 28 செயலிகளை நீக்கியுள்ளதாகவும், டெவலப்பர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனமும் ஆய்வு செய்த பிறகு 30-க்கும் மேற்பட்ட செயலிகளை நீக்கியுள்ளது. இருப்பினும், இன்னும் பல செயலிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும் டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட் கவலை தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.