
சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், கூகுள் ஜெமினியின் "நானோ பனானா AI புடவை ட்ரெண்ட்" இப்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது. 90-களில் பிரபலமாக இருந்த பாலிவுட் சினிமா ஸ்டைலில், காற்றில் பறக்கும் ஷிஃபான் புடவை, வின்டேஜ் தோற்றம், மற்றும் மாலை நேர ஒளி என பல கவர்ச்சிகரமான AI படங்களை இந்த ட்ரெண்ட் உருவாக்கி வருகிறது. பலருக்கு இந்த ட்ரெண்ட் ஒரு கனவுலக அனுபவத்தை கொடுத்தாலும், ஒரு பெண்ணின் திகிலூட்டும் அனுபவம் இந்த AI எடிட்களின் பாதுகாப்பைப் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜலக் பாவனானி என்ற இன்ஸ்டாகிராம் பயனர், ஜெமினி AI-யை முயற்சித்து பார்த்தபோது ஒரு திகிலூட்டும் அனுபவத்தை எதிர்கொண்டார். அவர் ஒரு முழுக்கை கொண்ட பச்சை நிற உடையணிந்த தனது புகைப்படத்தை பதிவேற்றி, ஒரு ப்ராம்ப்டை கொடுத்தார். முதலில் அவருக்கு கிடைத்த புடவை புகைப்படம் மிகவும் அழகாக இருந்தது. அதனால் அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் பதிவேற்றினார்.
ஆனால், அந்த படத்தை உன்னிப்பாக கவனித்தபோது, ஒரு வித்தியாசமான விஷயம் அவர் கண்ணில் பட்டது. AI-யால் உருவாக்கப்பட்ட அந்த படத்தில், அவரது இடது கையில் ஒரு சிறிய மச்சம் இருந்தது. அதிர்ச்சி என்னவென்றால், அவருக்கு நிஜ வாழ்க்கையில் அதே இடத்தில் ஒரு மச்சம் இருந்தது. ஆனால், அவர் பதிவேற்றிய அசல் படத்தில் அந்த மச்சம் துளியும் தெரியவில்லை.
"எனது உடலில் இந்த இடத்தில் மச்சம் உள்ளது என்று ஜெமினிக்கு எப்படி தெரியும்?" என்று தனது பதிவில் கேள்வி எழுப்பினார். இந்த அனுபவத்தை அவர் "பயங்கரமானது மற்றும் திகிலானது" என்று வர்ணித்துள்ளார். அவர் தனது ஃபாலோயர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்: “நீங்கள் சமூக வலைதளங்களில் அல்லது AI தளங்களில் எதை பதிவேற்றினாலும், எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம்.”
அவரது இந்த வெளிப்பாடு இன்ஸ்டாகிராமில் பலத்த விவாதங்களை கிளப்பியது. சிலர், AI கருவிகள் எந்த அளவுக்கு தரவுகளை அணுகும் என்பது குறித்து கவலைகளை எழுப்பினர். மற்றவர்கள் இதை வெறும் தற்செயல் என்று கூறி, அந்த பெண் வைரலாக வேண்டும் என்று இதை செய்திருப்பார் என குற்றம்சாட்டினர்.
இந்த சர்ச்சை, AI படங்கள் எடிட் செய்வதில் உள்ள பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வைத்துள்ளது. கூகுள் மற்றும் OpenAI போன்ற நிறுவனங்கள், பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கியுள்ளதாக கூறினாலும், பயனர்களின் எச்சரிக்கைதான் மிக முக்கியமானது என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
உதாரணமாக, கூகுளின் "நானோ பனானா" எடிட்கள், SynthID எனப்படும் கண்ணுக்கு தெரியாத வாட்டர்மார்க் மற்றும் மெட்டாடேட்டா டேக்-களை கொண்டிருக்கின்றன. இந்த வாட்டர்மார்க், அந்த படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதி செய்கிறது என்று கூகுள் கூறுகிறது. ஆனால், இந்த வாட்டர்மார்க்கை கண்டறியும் கருவிகள் பொதுமக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. மேலும், இந்த வாட்டர்மார்க்கை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
"வெறும் வாட்டர்மார்க் மட்டும் போதாது" என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹனி ஃபரித் எச்சரித்துள்ளார். ரியாலிட்டி டிஃபெண்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென் கோல்மேன், "வாட்டர்மார்க்கிங் என்பது ஒரு சிறந்த தீர்வாக தோன்றினாலும், நிஜ உலகில் இது எளிதில் தோல்வியடையும்" என்று கூறியுள்ளார். தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள பலர், யதார்த்தமான டீப்ஃபேக்குகளுக்கு எதிராக போராட, வாட்டர்மார்க்கை பிற பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
தற்போது, AI புடவை எடிட்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு பற்றிய விவாதங்களும் அதிகரித்து வருகின்றன. நீங்கள் பதிவேற்றும் தகவல்களில் எச்சரிக்கையாக இருங்கள், மேலும் AI-யால் உங்கள் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியும் என்பதை கவனமாக ஆராயுங்கள்.