அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் (NASA) சுமார் 1.5 டன் எடை கொண்ட விண்வெளித் தொலைநோக்கி ஒன்று, தனது 22 ஆண்டுகால நீண்ட விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைகிறது. இந்த விண்கலத்தின் சில பாகங்கள் பூமியின் தரையை வந்தடைய வாய்ப்புள்ளதாகவும், அதன் பயணப் பாதையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைந்திருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே ஒருவித பதற்றம் எழுந்துள்ள சூழலில், இதன் உண்மைத்தன்மை மற்றும் ஆபத்து குறித்து விண்வெளி விஞ்ஞானிகள் விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர்.
நாசாவின் 'நீல் கெரல்ஸ் ஸ்விஃப்ட் அப்சர்வேட்டரி' (Neil Gehrels Swift Observatory) என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி, கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆரம்பத்தில் 'ஸ்விஃப்ட் காமா-ரே பர்ஸ்ட் எக்ஸ்ப்ளோரர்' என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஆய்வகத்தின் ஆயுட்காலம் வெறும் 2 ஆண்டுகளாகவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், எதிர்பார்ப்புகளையும் கடந்து சுமார் 22 ஆண்டுகள் விண்வெளியில் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டது. தனது பணிக்காலத்தில், 2,000-க்கும் மேற்பட்ட காமா-கதிர் வெடிப்புகளையும், 1,400 சூப்பர்நோவாக்களையும் கண்டறிந்து விண்வெளி அறிவியலுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை இது வழங்கியுள்ளது. இருப்பினும், சமீபத்தில் செயலிழந்த இந்த விண்கலத்தைக் காப்பாற்ற நாசா மேற்கொண்ட தீவிர முயற்சிகள் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்தன.