
இன்ஸ்டாகிராம், பெற்றோரின் கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கும், டீன் ஏஜ் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி டீன் ஏஜ் பயனர்கள் இன்ஸ்டாகிராமை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆனால், இதன் மூலம் இளம் பருவத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பான கவலைகளை இந்த் அப்டேட் முழுமையாக நிவர்த்தி செய்யாது என்றும் கூறப்படுகிறது.
மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் "டீன் அக்கவுண்ட்ஸ்" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பதின் பருவ பயனர்கள் இன்ஸ்டாவைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் எதைப் பார்க்கலாம், பார்க்கக் கூடாது என்பதையும் கட்டுப்படுத்தலாம். மேலும், முன்பின் அறிமுகம் இல்லாத அந்நியர்களுடன் தொடர்பு கொள்வதையும் கண்காணித்து மாற்றங்கள் செய்யலாம்.
இன்ஸ்டா கொண்டுவந்துள்ள இந்தத் திட்டம் பெற்றோரின் கண்காணிப்பு வசதிகளை விரிவுபடுத்துகிறது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாட்டை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க அனுமதிக்கிறது. மெட்டா நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவுக்கு உலகளாவிய தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஆன்டிகோன் டேவிஸ் இந்த மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை விளக்கியுள்ளார்.
"பல மில்லியன் கணக்கான இளம் பருவத்தினரின் அனுபவத்தை மாற்றுகிறோம்" என்று டேவிஸ் கூறுகிறார். தங்கள் விருப்பத்தேர்வுகள் மற்றும் தேவைகள் பற்றிய பெற்றோர்களின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்த டீன் அக்கவுண்ட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் 18 வயதுக்குட்பட்ட பயனர்களின் அனைத்து கணக்குகளையும் புதிய விதிகளின் கீ்ழ் கொண்டுவந்துள்ளது. புதிதாக ஃபாலோ செய்பவர்கள் தங்கள் பதிவுகளைப் பார்க்கவோ, லைக் செய்யவோ அல்லது கமெண்ட் செய்யவோ கணக்கு வைத்திருப்பவரின் அனுமதி தேவைப்படும். இந்த அம்சம் இளம் பயனர்களுக்கான தனியுரிமையை மேம்படுத்தும் என மெட்டா நிறுவனம் கருதுகிறது.
டீன் ஏஜ் பயனர்கள் இரவு 10 மணிக்கு மேல் நோட்டிஃபிகேஷன் பெறுவதைத் தடுக்கும் அம்சமும் அப்டேட்டில் உள்ளது. அதேபோல காலை 7 மணிக்கு வரை தீங்கு விளைவிக்கும் ஆபாசமான பதிவுகள் அவர்கள் கணக்கில் தோன்றாமல் கட்டுப்படுத்தப்படும். கணக்கு வைத்திருப்பவர் பின்தொடராத பயனர்களிடமிருந்து மெசேஜ்கள் வருவதும் தடுக்கப்படும்.
மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் பதிவுகளுக்கான தீம். கலை, விளையாட்டு, அறிவியல் போன்ற தங்களுக்கு ஆர்வமுள்ள ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்த பதிவுகளை மட்டும் பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமான தீம் என்ன என்பதை பயனர்களே தேர்ந்தெடுக்கலாம். 17 வயதிற்குட்பட்ட பயனர்கள் தங்கள் பிரைவசி செட்டிங்கை மாற்றி, தங்கள் கணக்கை பப்ளிக் அக்கவுண்ட்டாக மாற்றலாம். 16 வயதுக்கு குறைவானவர்கள் இதற்கு பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும்.
இன்ஸ்டாகிராம் இந்த மாற்றங்களை புதிய கணக்குகளுக்கு உடனடியாக அமல்படுத்தும். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இப்போது உள்ள கணக்குகளுக்கும் இந்த அம்சம் அடுத்த இரண்டு மாதங்களில் விரிவுபடுத்தப்படும். மற்ற நாடுகளில் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த அப்டேட் ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும்.
ஆனால், சில டீன் ஏஜ் பயனர்கள் தங்கள் கணக்கைத் தொடங்கும்போது பொய்யான வயதைக் குறிப்பிட்டு, கட்டுப்பாடுகளைத் தவிர்க்க முயற்சி செய்யலாம். இதை எதிர்கொள்ள, இன்ஸ்டாகிராம் வீடியோ செல்ஃபி போன்ற முறைகளை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பெற்றோரைப் பொறுத்தவரை பிரத்யேகமான கண்காணிப்பு வசதியை இன்ஸ்டாகிராம் வழங்குகிறது. இந்த அம்சம் பெற்றோர்கள் டீன் ஏஜ் குழந்தைகள் இன்ஸ்டாவை பயன்படுத்தும் விதத்தைக் கண்காணிக்கவும், நேர வரம்புகளை அமைக்கவும், குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்துவதைத் தடுக்கவும் வசதிகள் உள்ளன. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.