ஆம்ஸ்ட்ராங் கொலை டூ தி.மலை நிலச்சரிவு! 2024ல் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய 5 சம்பவங்கள்!

First Published | Dec 11, 2024, 9:40 PM IST

2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. அரசியல் கொலைகள், இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்துகள் என பல சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்த சம்பவங்கள் தமிழக மக்களின் மனதில் நீங்காத தழும்புகளை ஏற்படுத்தின.

Armstrong Murder

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை 

வட சென்னையில் முக்கிய அரசியல் தலைவராக அறியப்பட்டவர் ஆம்ஸ்ட்ராங். தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். திமுக- அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுக்கு வட சென்னை பகுதியில் டப் கொடுக்கும் வகையில் அரசியலில் திகழ்ந்து வந்தார்.  கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவம் சினிமா மிஞ்சும் அளவிற்கு மர்ம நிறைந்ததாக இருந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Udhayanidhi Stalin

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என அன்பில் மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தது மட்டுமல்லாமல் தீர்மானம் நிறைவேற்றினர். இதனையடுத்து 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

Tap to resize

Ponmudi

அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை

உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தண்டனைக்கு தடை வாங்கி மீண்டும் அமைச்சரானார். 

Chennai Marina Airshow

இந்திய விமானப்படை விழாவில் நடந்த சோகம் சம்பவம் 

இந்திய விமானப்படையில் ஆண்டு விழாவையொட்டி சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் 6ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுமார் 10 லட்சத்திற்கும் அதிக பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் கடும் வெயிலால் 200க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tiruvannamalai landslide

திருவண்ணாமலை நிலச்சரிவு

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. குறிப்பாக  திருவண்ணாமலையில் வரலாறு காணாத மழை பெய்ததால் மகா தீபம் ஏற்றும் மலை உச்சியில் திடீரென நிலச்சரிவு  ஏற்பட்டதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதனையடுத்து பெரும் சவால்களுக்கு இடையே 7 பேரின் உடல்கள் ஒரு வழியாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Latest Videos

click me!