VS Babu : யார் இந்த வி.எஸ்.பாபு? திமுக, அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்... தவெகவில் MLA ஆனது எப்படி? வியக்க வைக்கும் அரசியல் பயணம்

Published : Nov 19, 2026, 04:25 PM IST

Who Is VS Babu? கொளத்தூர் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் அரசியல் பயணம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
விஎஸ் பாபுவின் அரசியல் பயணம்

விஎஸ் பாபு தனது அரசியல் வாழ்க்கையை திமுகவின் சாதாரண தொண்டராகத் தொடங்கியவர். கட்சியில் படிப்படியாக வளர்ந்து, வடசென்னை மாவட்டச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பையும் பெற்றார். அப்போது மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான அரசியல் நிர்வாகிகளில் ஒருவராகவும், வடசென்னையில் திமுகவின் செல்வாக்கை வலுப்படுத்தியவராகவும் இருந்தார். குறிப்பாக, வடசென்னையில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதிலும், தேர்தல் களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இவருக்கு முக்கியப் பங்கு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் வடசென்னையில் திமுகவின் வலுவான முகங்களில் ஒருவராக விஎஸ் பாபு அறியப்பட்டார்.

25
90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல் வெற்றி!

2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு, சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். இந்த வெற்றி அவருடைய அரசியல் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு புரசைவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் முதன்முறையாக கொளத்தூரில் களம் கண்ட மு.க.ஸ்டாலினின் வெற்றியை உறுதி செய்வதற்கான தேர்தல் பணிகளில் விஎஸ் பாபு முக்கியப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

35
ஸ்டாலினின் வெற்றிக்காக உழைத்தவருக்கே கிடைத்த அதிருப்தி!

2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை வெற்றி பெறச் செய்ய விஎஸ் பாபு தீவிரமாகக் களப்பணியாற்றினார். இருப்பினும், அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை விட சுமார் 2,000 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று ஸ்டாலின் வெற்றி பெற்றிருந்தார். இதனால் விஎஸ் பாபு மீது கட்சித் தலைமை அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகு திமுகவில் தனக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்த விஎஸ் பாபு, அப்போது அமைச்சர் சேகர்பாபுவின் அரசியல் வளர்ச்சியும் வடசென்னையில் அதிகரித்ததால் கட்சியில் தனது செல்வாக்கை இழந்ததாகக் கூறப்படுகிறது.

45
ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

திமுகவில் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் விஎஸ் பாபு. அக்கட்சியிலும் அவருக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், அங்கும் சில காலத்திற்குப் பிறகு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்கிடையே, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காது என்ற சூழல் உருவானது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கட்சியில் இணைந்த அவருக்கு முக்கியப் பொறுப்பும் வழங்கப்பட்டது.

55
அரசியல் அனுபவத்தை நம்பி களமிறக்கிய விஜய்!

சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து யாரைக் களமிறக்குவது என்ற கேள்வி தவெகவில் எழுந்தது. அப்போது வடசென்னையில் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட விஎஸ் பாபுவை வேட்பாளராக நிறுத்தினார் விஜய். இதில் ஒரு சுவாரஸ்யமான அரசியல் திருப்பம் என்னவென்றால், 2011-ம் ஆண்டு ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவதற்காகப் பணியாற்றிய அதே விஎஸ் பாபு, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு எதிராகவே தேர்தல் களத்தில் இறங்கினார்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது, கொளத்தூரில் ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து விஎஸ் பாபு வெற்றி பெற்றார். இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ஸ்டாலினையே தோற்கடித்த விஎஸ் பாபு தேர்தல் முடிவு வந்த 6 மாதங்களில் உயிரிழந்திருப்பது தவெகவினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories