பறவை காய்ச்சல் அபாயம்: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் கூறும் முக்கிய வழிகாட்டுதல்கள்!

Published : Nov 19, 2026, 08:34 AM IST

கடலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாலும், கார்த்திகை மாதத்தாலும் கோழி இறைச்சி விற்பனை பாதியாகக் குறைந்து முட்டை விலையும் சரிந்துள்ளது. அறிகுறிகள் மற்றும் தற்காப்பு வழிகள் என்னென்ன?

PREV
16
பறவை காய்ச்சல்: கோழி இறைச்சி, முட்டை விற்பனை சரிவு

பறவை காய்ச்சல் பாதிப்பு மற்றும் கார்த்திகை மாதம் பிறந்துள்ளதன் காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் கோழி இறைச்சி விற்பனை பாதியாகச் சரிந்துள்ளது. இதேபோல் நுகர்வு குறைந்ததால் முட்டை விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. தீபாவளிப் பண்டிகை விற்பனையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தின் நொச்சிக்காடு, தம்மனாம்பேட்டை, திம்மராவுத்தன்குப்பம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் பிராய்லர் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அப்பகுதிகளில் உள்ள கோழிகள் திடீரெனக் கொத்துக்கொத்தாக உயிரிழந்ததால் பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இறந்த கோழிகளின் மாதிரிகளை நாமக்கல் மற்றும் சென்னையில் உள்ள ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில், கோழிகள் பறவை காய்ச்சலால் (Avian Influenza) உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

26
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தொடர்ந்து, நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க இறந்த கோழிகள் ஆழமான பள்ளம் தோண்டிப் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டன. மேலும், பண்ணைகளில் இருந்த எஞ்சிய கோழிகளும் விற்பனைக்கு அனுப்பப்படாமல் அழிக்கப்பட்டன. மறுஉத்தரவு வரும் வரை புதிய கோழிகளை வாங்கி வளர்க்க வேண்டாம் எனப் பண்ணையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

36
பாதியாகக் குறைந்த இறைச்சி விற்பனை

அரசு தரப்பில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் மத்தியில் பறவை காய்ச்சல் குறித்த அச்சம் இன்னும் விலகவில்லை. இதன் காரணமாக மக்கள் கோழி இறைச்சி வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள ஐயப்ப பக்தர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து வருவதும் விற்பனை சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து கோழி இறைச்சி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், பறவை காய்ச்சல் பீதியால் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்பு தினமும் 75 கிலோ வரை விற்பனையான கோழிக்கறி, கடந்த 2 வாரங்களாக 25 கிலோவாகக் குறைந்தது. தற்போது சற்று முன்னேறி 40 கிலோ வரை விற்பனையாகிறது. மக்களின் அச்சம் முழுமையாக நீங்கி, கார்த்திகை மாதம் முடிந்த பிறகே விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றார்.

46
முட்டை விலை வீழ்ச்சி

கோழி இறைச்சியைப் போலவே முட்டை வாங்குவதையும் பொதுமக்கள் தவிர்த்து வருவதால் அதன் விலையும் குறைந்துள்ளது. முன்னதாகச் சில்லறை விலையில் ரூ.7.50-க்கும், மொத்த விலையில் ரூ.7.10-க்கும் விற்பனை செய்யப்பட்ட ஒரு முட்டை, நேற்று மொத்த விற்பனையில் ரூ.6.40-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.6.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நுகர்வு தொடர்ந்து குறைந்து வருவதால் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

56
பறவை காய்ச்சல் பாதிப்புகள் & தற்காத்துக் கொள்ளும் வழிகள்

பறவை காய்ச்சல் என்பது 'ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா' (Avian Influenza - H5N1) என்ற வைரஸால் பறவைகளுக்கு ஏற்படும் தொற்று நோயாகும். இது மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் கொண்டது என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை. பாதிக்கப்பட்ட கோழிகளைச் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்று பார்ப்போம்.

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளைச் சுத்தம் செய்யும்போதும், சரியாக வேகவைக்காமல் (குறைந்த வெப்பநிலையில் சமைத்து) சாப்பிடும்போதும் வைரஸ் மனித உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. தொற்று ஏற்பட்டால் கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தசை வலி & தலைவலி ஆகியவை ஏற்படும். நோய் முற்றினால் நிமோனியா (Pneumonia), கடுமையான மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு வரை கொண்டு செல்லும் அபாயம் உள்ளது. சிலருக்குக் கண் சிவத்தல் (Conjunctivitis), வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.

66
தற்காத்துக் கொள்வது எப்படி?

பறவை காய்ச்சல் வைரஸ் அதிக வெப்பநிலையில் அழிந்துவிடும் தன்மை கொண்டது. எனவே, கோழி இறைச்சி & முட்டைகளை 70 டிகிரி செல்சியஸுக்கு (70°C) மேல் நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டும். அரைவேக்காடாக சமைப்பதையோ, பச்சை முட்டை குடிப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். பச்சை இறைச்சியைச் சுத்தம் செய்த பிறகு கைகளைச் சோப்பு போட்டு வெந்நீரில் நன்கு கழுவ வேண்டும். இறைச்சி வெட்டப் பயன்படுத்திய கத்தி, பலகை மற்றும் பாத்திரங்களை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

பச்சை இறைச்சியையும், சமைத்த உணவுகளையும் ஒரே இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட கோழிகள், காட்டுப் பறவைகளை வெறும் கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். பண்ணைகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும். பறவை காய்ச்சல் பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இறைச்சி மற்றும் முட்டைகள் வாங்குவதைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது பாதுகாப்பானது. காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories