Published : Apr 06, 2025, 10:31 AM ISTUpdated : Apr 06, 2025, 10:34 AM IST
பிப்ரவரி மாதமே வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. போதா குறைக்கு கோடையில் வெயிலும் தொடங்கியதால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதனிடையே ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.