பக்தர்களுக்கு முக்கிய செய்தி! திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட்! ஆன்லைனில் பெறுவது எப்படி?

First Published | Nov 22, 2024, 4:34 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 1 முதல் 17 வரை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறலாம். 

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.  இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமலை அம்மனும் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் தினமும் பொதுமக்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக  மாதம்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரர் அருளை பெறுகின்றனர். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதம்தோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று சந்திரன் கிருத்திகை நட்சதிரத்திலிருக்கும்போது கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா மொத்தமாக 17 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா 3 நாட்கள் இக்கோவிலின் காவல் தெய்வமான துர்கையம்மன் கோயிலிலும், 10 நாட்கள் அண்ணாமலையார் ஆலயத்திலும், தொடர்ந்து 4 நாட்கள் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.

Tap to resize

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 13ம் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபமும்,  மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை நகர் முழுவதுமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். இதனால் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. 

ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் வந்தால், கோயிலில் கூட்ட நெரிசல், பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்பதால் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது கோவிலுக்குள் பக்தர்கள் முன்பதிவின் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படுவது வழக்கம். பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1,100 பேருக்கும் ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட் வழங்கப்படும். ஆன்லைனில் உரிய கட்டணம் செலுத்தி, அனுமதி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் பரணி தீப நிகழ்வை காண வருபவர்கள் அதிகாலை 2.30 மணிக்கும், மகா தீபத்தை காண வருபவர்கள் பகல் 3.30 மணிக்கும் வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் வருகிற 10 அல்லது 11-ம் தேதி விநியோகிக்கப்படுகிறது. ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களுடன், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் 5,200 பேருக்கு பரணி தீபத்தை காணவும், 8000 பேர் மகா தீபத்தை காணவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

Latest Videos

click me!