
தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாப்பிக் ஆக இருந்தது. இந்த இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், இந்த இரு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்த தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இறுதியில் 61,470 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றியைத் தன்வசப்படுத்தினார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட கணிதா சம்பத் 38,770 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்குச் சென்றார். நாம் தமிழர் கட்சிக்கு 1,703 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1,441 வாக்குகளும் கிடைத்தன.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 1,84,413 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இதன் மூலம் இத்தொகுதியில் 86.26 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது.
மதுராந்தகத்தைத் தொடர்ந்து தாராபுரம் தொகுதியிலும் தவெக தனது வெற்றியைப் பதிவு செய்தது. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடைபெற்றது. இறுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் சுகன்யா 52,400 வாக்குகளைப் பெற்றதால், சத்யபாமா 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பானுமதி 41,078 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மேலும், நாம் தமிழர் கட்சிக்கு 4,954 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1,099 வாக்குகளும் கிடைத்தன. தாராபுரத்தில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் இருந்த நிலையில், 1,79,314 பேர் வாக்களித்தனர். இதனால் அங்கு 80.30 சதவீத வாக்குப்பதிவு பதிவானது.
இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை அமைச்சர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார், டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உள்ளிட்டோர் முதல்வரை நேரில் சந்தித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், இந்தச் சந்திப்பின்போது முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் தளபதியின் சிக்னேச்சர் சைகையை வெளிப்படுத்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வெற்றி தனக்கோ, கட்சிக்கோ மட்டுமே சொந்தமானது அல்ல என்றும், மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், இந்தத் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறும் முயற்சிகள் இல்லாமல் வெற்றி கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார். வாக்காளர்களை அடைத்து வைப்பது போன்ற செயல்களோ, ஏற்கெனவே பேசப்பட்ட தேர்தல் உத்திகளோ இன்றி, அன்பு, உறவு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த வெற்றி கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் ஊழல் சக்திகளின் கோட்டை அல்ல; மக்கள் சக்தியின் வலிமையான தளம் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் பணபலத்தை மையமாகக் கொண்ட அரசியலுக்கு எதிராகக் கிடைத்த முக்கியமான வெற்றி இது என்றும் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் தங்களைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் முன்வைத்தவர்களுக்கு வாக்காளர்கள் தங்களது தீர்ப்பின் மூலம் பதிலளித்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். தங்களது பிரசாரத்தை நையாண்டி செய்தவர்களுக்கும் இந்த வெற்றி சரியான பதிலாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் குறுகிய காலம் மட்டுமே பிரசாரம் செய்ததை விமர்சித்தவர்களுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரத்தில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகிய இருவருக்கும் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வெற்றிக்காக உழைத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் களத்தில் தங்களுடன் இணைந்து பணியாற்றிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
இந்த இடைத்தேர்தல் வெற்றி தனிப்பட்ட முறையில் தனக்குக் கிடைத்த வெற்றியோ அல்லது தவெகவின் வெற்றியோ மட்டுமல்ல என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அவதூறுகள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அரசியல் நாகரிகமற்ற செயல்களுக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பாகவே இதைப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகத்திற்கும் தனிமனித மாண்பிற்கும் கிடைத்த வெற்றி என்பதுடன், எல்லாவற்றிற்கும் மேலாக மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் உரிய வெற்றி இது என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்திலும் இதுபோன்ற வெற்றிகள் தொடரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், மக்களுடன் இணைந்தே செயல்படுவோம் என்றும் தமிழக மக்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.
தனது அறிக்கையின் இறுதியில், “நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.