முஸ்தபா பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ''சட்டமன்றத்தில் சனாதன இந்து தர்மத்தை ஒழிப்பதைப் பற்றி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பேசிய சில நாட்களுக்குப் பிறகு, தவெக எம்.எல்.ஏ வி.எம்.எஸ். முஸ்தபா, உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக வந்துள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ நமக்கு உதவும் ஒரு நித்திய தர்மத்தின் மீது அவர்கள் தங்கள் மனதில் எவ்வளவு வெறுப்பை வைத்திருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது!
திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும், தங்களின் மிகக் குறுகிய கால வரலாற்றிலேயே, தாங்கள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளன. சனாதன இந்து தர்மத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தங்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளன என்பதை திமுக மறந்துவிட்டது. தவெக-வும் விரைவில் அதை நினைவுகூரும்.
மக்கள் தண்டிப்பார்கள்
திமுக அல்லது தவெக ஆகிய இரு தரப்பினருக்கும் தங்களின் கொள்கையில் துணிச்சல் இருந்திருந்தால், சனாதன இந்து தர்மத்தை குறிவைப்பதுதான் தங்கள் அரசியலின் மையம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே பகிரங்கமாக அறிவித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர்கள் மதச்சார்பின்மை மற்றும் நாடகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, யாரிடம் ஓட்டு கேட்டார்களோ அதே மக்களின் நம்பிக்கையை இப்போது திமிருடனும் தண்டனைக்கு அஞ்சாமலும் அவமதித்து, தங்கள் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், சனாதன இந்து தர்மம் உங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும் 'பஞ்சிங் பேக்' (Punching bag) அல்ல! இவர்களின் இத்தகைய கருத்துக்கள் நம் மக்களால் தண்டிக்கப்படாமல் போகாது என்று நான் மனதார நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.