கைது செய்யப்பட்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி தொடர்பான புகாரின் அடிப்படையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 23ஆம் தேதி முறையாகப் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்றது. விசாரணையை நேர்மையாகவும், உயர்மட்டக் கண்காணிப்புடனும் மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
24
வீட்டில் வைத்து கைது செய்த போலீசார்
இதைத்தொடர்ந்து, நவம்பர் 27ஆம் தேதி மாலை கள்ளக்குறிச்சியில் உள்ள அருள் விக்னேஷின் வீட்டில் வைத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
34
நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்
விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடர்ந்து அருள் விக்னேஷ் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரைச் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்.
கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ்
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அருள் விக்னேஷை கடலூர் மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.
இதன்படி, கள்ளக்குறிச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தவெக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் 75, 78, 79, 132 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.