Published : Oct 03, 2024, 07:50 AM ISTUpdated : Oct 03, 2024, 07:58 AM IST
TNPSC Group 2 Free Coaching: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள், முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன. இதில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,327 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
25
TNPSC Group 2 Exam
குரூப் 2-வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதேபோல், குரூப் 2ஏ-வில் தமிழ்நாடு மின்விசை நிதி, வருவாய் உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் 1,820 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு தமிழக முழுவதும் மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் செப்டம்பர் 14ம் டிஎன்பிஎஸ்சி குரூப் -2க்கான தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு கோவை மாவட்டத்தில் தொடங்க உள்ளது. இந்த பயிற்சியில் பங்கு பெற விரும்பும் மாணவ மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 2 தேர்வுக்கு 507 காலிப் பணியிடங்களுக்கும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 2 தேர்வுக்கு 1,820 காலிப் பணியிடங்களுக்கும் என மொத்தம் 2,327 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு முதன்மைத் தேர்வானது பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வு எழுதிய மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மையத்தில் ஸ்மார்ட் போர்டு, இலவச ‘வைஃபை’ வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியவை உள்ளது. வாரத் தேர்வுகள் முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட உள்ளது. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு studvcirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 93615 76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் ழுழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.